ஜனதிபதியின் மே தின வாழ்த்து ….

photo

 தொழிலாளர்கள் தொடர்ந்தும் சுரண்டப்படுவதை ஒழித்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் நல்லாட்சி அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதியின் மேதினச் செய்தி வருமாறு, உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் உழைக்கும் மக்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மேதின நிகழ்வு ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான ஒரு பெரும் போராட்டத்தின் ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்களினால் கொண்டாடப்பட்டது. அப்போதிருந்து இத்தினம் சர்வதேச ரீதியாக உழைக்கும் வர்க்கத்திற்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

பல தலைமுறைகளாக உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகவும் உழைக்கும் மக்களை ஒடுக்கிவைத்திருந்த அடக்குமுறை சக்திகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட நீண்ட போராட்டத்தை இந்த மே தினம் நினைவூட்டுகிறது.

இவ்வருட மே தினத்தைக் கொண்டாடும் நாம் தொழில் தளங்களிலும் சமூகத்திலும் அமைதியான சூழ்நிலையில், ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்குமான உரிமைகளை அனுபவிக்கும் ஒரு ஜனநாயக சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பதையிட்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைய முடியும்.

இன்று எமது நாடு உழைக்கும் மக்களை சுரண்டுவதை முற்றாக ஒழித்துக்கட்டி, உழைக்கும் மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் மேலும் பலப்படுத்துகின்ற நல்லாட்சியை நோக்கிய சரியான பாதையில் பயணிக்கின்றது.

எமது உழைக்கும் மக்கள் பெற்ற கூட்டான வெற்றிகளை வினைத்திறன் மிக்க வகையில் பாதுகாப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோன்று உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்கள் அடைந்த வெற்றிகளின் ஊடாக அவர்களுக்கு உரித்தான எல்லா நன்மைகளையும் அவர்கள் அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நாம் இவ்வருட மே தினத்தை சங்க, வெத, குரு, கொவி, கம்கரு – மதகுருமார்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என்ற எமது தாய் நாட்டின் ஐம்பெரும் சக்திகளின் முயற்சிகளின் ஊடாக பெற்ற வெற்றிகளை அனுபவித்த நிலையில் கொண்டாடுகிறோம். எனவே, நல்லாட்சிக்கான தங்களது அர்ப்பணிப்பை தொடர்ந்தும் வெளிப்படுத்த முன்வருமாறு உழைக்கும் மக்களை நான் கேட்டுக்கொள்வதோடு, உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்களுடன் இணைந்து 2015 மே தினக் கொண்டாட்டம் முழுமையாக வெற்றிபெற எனது நல்லாசிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.