சங்ககாரா 30 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 70 ஓட்டங்களைக் குவித்தார்!

 

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட All Stars Cricket தொடரின் இரண்டாவது போட்டியில், சச்சின் அணியை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஷேன வோர்னின் அணி அபார வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் All Star 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்தப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் சச்சினின் பிளாஸ்டர்ஸ் அணியும், ஷேன் வோர்னின் தலைமையில் வார்னே வாரியர்ஸ் அணியும் உருவாக்கப்பட்டது.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக முடிவுசெய்யப்பட்டது. இதன்படி கடந்த 7 ஆம் திகதி நடந்த முதல் போட்டியில் வோர்ன் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட இந்த தொடரில் வோர்னின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் 2 ஆவது 20 ஓவர் போட்டி ஹூஸ்டன் நகரில், இன்று இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற சச்சின் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வார்னே அணியினர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மைக்கேல் வோர்ன்(30), மத்யூ ஹெய்டன்(32) அதன்பிறகு களம் இறங்கிய கலிஸ்(45), பொண்டிங்(41), சங்ககாரா ஆகியோர் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசி ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டனர்.

இதில் சங்ககாரா 30 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 70 ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியாக களமிறங்கிய சைமண்ட்ஸ் 6 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி 19 ஓட்டங்களையும், ஜொண்டி ரோட்ஸ் 8 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 18 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இறுதியாக வார்னே வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களைக் குவித்தது. இது டி20 வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

பங்களூர் ரோயல் சரஞ்சர்ஸ் அணியினரால் புனே வொரியர்ஸ் அணிக்கெதிராக பெறப்பட்ட 263 – 5 எனும் ஓட்ட எண்ணிக்கையே அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். இலங்கை அணி கென்ய அணிக்கெதிராக 260 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, 263 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் சச்சின் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணிவீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஓட்டக் குவிப்பில் ஈடுபடவில்லை.

கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய செவாக் 8 பந்துகளில் 16 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதேபோல் சச்சின் டெண்டுல்கர் 30 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பிறகு களமிறங்கிய கங்குலி(12), லாரா(19), ஜெயவர்த்தன(5), குலுஸ்னர்(21) அனைவருமே சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் சகலதுறை வீரர் ஷோன் பொலக் 22 பந்துகளில் 52 ரன்களை குவித்தார். இதனால் சச்சினின் பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை எடுத்து, 57 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் வோர்னே வொரியர்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் 70 ஓட்டங்களைக் குவித்த சங்ககாரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியினை காண சுமார் 28,000 ரசிகர்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.