எவன்-கார்ட் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்டதாகவும் எவன்-கார்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி உத்தரவிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவ்வாறான ஒரு கருத்தை ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது என்றும் நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ அந்தக் கூட்டத்தின் போது இது தொடர்பாக கதைக்கவில்லை என்றும் நீதியமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
எவன்-கார்ட் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்,
அதனை கடற்படைத் தளபதியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
மிதக்கும் ஆயுதக் கப்பலில் உள்ள ஆயுதங்களில் 300க்கும் அதிகமானவற்றில் இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்த ஆயுதங்கள் சில நைஜீரியாவின் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்ததாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.