முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் ஆஜர் !

 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

mervin silva

வெள்ளை வேன் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

2011 ஆம் ஆண்டு முகத்துவாரம் பிரதேசத்தில் வௌ்ளை வேனில் மூவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில், கடத்தப்பட்ட மூவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் மேர்வின் சில்வாவை சாட்சிக்கு அழைக்குமாறு இதன் போது கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.

இது தொடர்பில் முழுமையான தகவலைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேர்வின் சில்வா வழங்கவில்லை எனவும் கடிதம் மாத்திரமே வழங்கியுள்ளதாகவும் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி 26 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.