126 தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள், இன்று முடிவடையும் : மகிந்த அமரவீர !

photo

 இலங்கை சிறைகளில் உள்ள 126 தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள், இன்று முடிவடையும் என்று இலங்கை மந்திரி மகிந்தா அமரவீரா தெரிவித்தார். 

தமிழகத்தின் ராமநாதபுரம், நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. கடந்த சில வாரங்களில் பகுதி பகுதியாக கைது செய்யப்பட்ட மொத்தம் 126 தமிழக மீனவர்கள், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். 

இந்நிலையில், அந்த மீனவர்களை விடுவிக்கும் நடைமுறை, இன்று முடிவடையும் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்தா அமரவீரா நேற்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:- 

இந்தியாவசம் 37 இலங்கை மீனவர்கள் உள்ளனர். இலங்கையின் கட்டுப்பாட்டில், 126 தமிழக மீனவர்கள் உள்ளனர். இரு நாடுகளும் தத்தமது கட்டுப்பாட்டில் உள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள், திங்கட்கிழமை (இன்று) முடிவடையும். அப்படி முடிவடைந்தால், அவர்களை விடுவிப்பது சாத்தியமாகி விடும். 

ஆயினும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளையும், இதர சாதனங்களையும் விடுவிக்க மாட்டோம். 
எதிர்காலத்திலும், படகுகளை கைப்பற்றினால், விடுவிக்க மாட்டோம். 

இந்தியா-இலங்கை இடையே மீனவர் சங்க பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. அந்த பேச்சுவார்த்தையால் பயனில்லை என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்தனர். 

இந்திய தரப்பில் பங்கேற்ற மீனவர் சங்க பிரதிநிதிகள் அனைவரும் உண்மையிலேயே மீனவர்களே இல்லை. ஏனெனில், படகுகள் அனைத்தும் தமிழக அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. 

மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வுகாண தூதரக வழிமுறைகளை தொடர்ந்து ஆராய்வோம். இந்தியாவுடன் நல்லுறவை பின்பற்றிக்கொண்டே இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் எங்கள் நோக்கம். 

இவ்வாறு மகிந்த அமரவீர கூறினார்.