முஸ்லிம் மக்களின் அங்கீகாரம் பெற்ற தேசிய தலைவர் யார் ?

rauff hakeem , rishad
 

 முஸ்லிம் மக்களின் அங்கீகாரம் பெற்ற தேசிய தலைவர் யார்? தனது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்த தயங்குகின்றவர்களால் அந்த இனத்துக்கு எப்படி தலைமை வகிக்க முடியும்? தேசிய தலைவருக்குரிய வரைவிலக்கணம் என்ன? 

ஒரு இனத்தின் தேசியத் தலைவர் குறிப்பிட்ட இனத்தை அடையாலப்படுத்தும் கட்சியின் தலைவராகவும், அந்த இன மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.    

முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் எனும் தேசிய அரசியல் கட்சியும், அதன் தலைவர் தேசியத் தலைவராக இருக்கும்போது  இக்கட்சியினதும், தலைவரினதும் தயவின் மூலம் அரசியல் முகவரி பெற்றவர்கள் இப்போது தன்னை தேசியத்தலைவர் என்று அழைப்பதன் மூலம் தேசியத் தலைவராகிவிட முடியாது. 

அப்படிதான் தன்னை ஒரு தேசியத் தலைவராக அடையாளப்படுத்த முன்பு மக்கள் மத்தியில் அதனை நடைமுறை ரீதியாக நிரூபித்து காட்ட வேண்டும். அதாவது மக்கள் அங்கீகாரம் பெறவேண்டும். சிங்கள தேசிய கட்சிகளின் மூலமும், பிற சமூகத்தின் தயவுடனும் பாராளுமன்றம் செல்கின்றவர்களால் எப்படி முஸ்லிம்களுக்கு தேசிய தலைமை வகிக்க முடியும்? வேண்டுமென்றால் ஊடகங்களின் அனுசரணையுடன் பாமரமக்களை எமாற்றலாமே தவிர, அது நடைமுறை சாத்தியமாகாது. 

ஓர் இனத்தின் தேசியத்தலைவர் என்பவர் அந்த இனத்தை முழுமயாக  பிரதிநிதித்துவப் படுத்துவபராகவும், அந்த இனத்தின் தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்துபவராகவும் இருத்தல் வேண்டும். ஆனால் ரிசாத் பதியுதீன், அதாஉல்லாஹ் போன்றவர்கள் தாம்  ஆரம்பித்த கட்சியின் மூலமாக கட்சித்தலைவர் என்ற வகையிலாவது இதுவரையில் தேர்தலில் தனித்து போட்டியிட்டதில்லை. ரிசாத் பதியுதீன் அவர்கள் வன்னி மாவட்ட தமிழ் மக்களினதும் அதாஉல்லாஹ் அவர்கள் அம்பாறை மாவட்ட சிங்கள மக்களின் தயவினாலும், சிங்கள தேசிய கட்சிகளின் மூலமாகவுமே இந்த இருவரும் பாராளுமன்றம் சென்றனர். 

இதில் சிங்கள மக்கள் அதாவுல்லாவை கைவிட்டதானால் அவர்  இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார். அதுபோல எதிர்காலங்களில் தமிழ் மக்கள் ரிசாத் பதியுதீனை கைவிட்டால் அவரும் அடுத்த தேர்தலில் தோல்வி அடைவார் என்பது ஒன்றும் ரகசியமான விடயமல்ல. 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள், தான் முஸ்லிம்களின் தேசியத்தலைவர் என்பதனை பலமுறை இந்நாட்டு மக்களுக்கு  நிரூபித்துக்காட்டியுள்ளார். அந்தவகையில் 2000 ஆம் 2001   ஆகிய இரு ஆண்டுகளில்  நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் கண்டி மாவட்டத்தில் தனியே மரச்சின்னத்தில் போட்டியிட்டு,  வேறு எந்தக் கட்சியினதோ அல்லது இனத்தினதோ ஆதரவு இன்றி பலம்பொருந்திய அமைச்சர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் வெற்றிபெற்றார்.  

2004 ஆண்டின் பொதுத் தேர்தலின் போது கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதாஉல்லாஹ் தலைமையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக மாற்று அணியில் களம் இறங்கிய நிலையில், கட்சி எதிர்கொண்ட பாரிய சவால்களை முறியடிக்கும் முகமாக தலைவர் ஹக்கீம் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.       

அத்துடன் மகிந்தராஜபக்ஸ அரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்குமாகான சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது இந்த நாட்டில் எந்தவொரு சிறுபான்மை தலைவருக்கும் கிடைக்காத தேசிய அங்கீகாரம் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. 

அதேவேளை அன்று தமிழர்களின் தேசிய தலைவராக போற்றப்பட்டவரும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்கள் தான் தென் தமிழீழத்தில் போட்டியிடப் போவதாக கூறி 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். 

அதுபோல சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் இரண்டு தடவைகள் கல்வி அமைச்சராக இருந்து முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவரும், அன்று முஸ்லிம்களின் தலைவர் என்று போற்றப்பட்டவருமான பதியுதீன் மஹ்மூத் அவர்கள் 1977 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.    

இந்நாட்டில் எந்தவொரு இனத்தின் தலைவருக்கும் தேசிய ரீதியில் கிடைக்காத மக்கள் அங்கீகாரம் எமது தேசியத் தலைவர் ஹகீம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் அவரே இந்நாட்டு முஸ்லிம் மக்களின் தேசிய தலைவர் என்பதனை பலமுறை முஸ்லிம் மக்களினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே எந்தவொரு இனத்தினாலும் உரிமை கோரமுடியாத கட்சியொன்றை வைத்துக்கொண்டு, தான் முஸ்லிம்களின் தலைவன் என்று காட்டிக்கொள்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. 

வன்னியில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பெறமுடியாது என்பதற்காக, ரிசாத் பதியுதீன் அவர்களும், அம்பாறையில் சிங்கள மக்களின் வாக்குகளை பெறமுடியாது என்பதற்காக அதாஉல்லா அவர்களும், தங்களது கட்சிக்கு, தனது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு துணிவில்லாமல் இருந்துகொண்டு, தன் இனத்துக்கு எவ்வாறு தேசிய தலைமை வகிக்க முடியும்? 

 எனவே தன்னை ஒரு தேசிய தலைவர் என்று ஊடகங்கள் மூலமாக அதிகம் விளம்பரப்படுத்தும் ரிசாத் பதியுதீன் அவர்கள், முடியுமானால் நாட்டில் பரந்தளவில் தேர்தலில் போட்டியிடாவிட்டால் பருவாயில்லை. குறைந்தது தனது சொந்த மாவட்டமான வன்னி மாவட்டத்திலாவது தான் அமைத்த தனது சொந்த கட்சியின் மூலம் ஒரு முறையேனும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும். அதன் பின்பு தேசியத்தலைவர் பற்றி பேசலாம். மக்களுக்கு காட்டுவதற்காக பெயருக்கு கட்சியொன்றினை வைத்துக்கொண்டு, தேசிய சிங்கள கட்சிகளின் தயவின் மூலமாக தேர்தலில் போட்டியிட்டுவிட்டு முஸ்லிம் மக்களின் தேசிய தலைவர் என்றால் இதனை பகுத்தறிவுள்ள எந்த முஸ்லிமினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது