-எம்.வை.அமீர்-
முதுபெரும் கல்விமானும் பன்னுலாசிரியரும், சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களை நினைவு கூர்ந்து, தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில் 2015-11-04 ல் இடம்பெற்ற நிகழ்வின்போது பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல்துறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் நீண்டதொரு உரையை பின்வருமாறு நிகழ்த்தினார்.
எஸ்.எச்.எம் ஜெமீலின் இன்மை சமூகத்தினால் ஆழமாக உணரப்பட்டது என்பது தான் அவரது மரணம் ஏற்படுத்திய கவலையாகும். அல்ஹாஐ; எஸ்.எச்.எம் ஜெமீல் காலமானார் என்ற செய்தி மிக விரைவாக காட்டுத் தீ போல் பரவியது. கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், சமூகப்பற்றாளர்கள் மத்தியில் அது ஒரு அதிர்வையும் ஏமாற்றத்தையும் உருவாக்கியது.
மரணம் விதிக்கப்பட்ட ஒன்றான போதும் சமூகத்தின் கவலைக்கும் ஏமாற்றத்துக்கும் நியாயமிருந்தது. சமூகச் செயற்பாடுகளில் இலக்கிய, அறிவியல், கல்வி முயற்சிகளில் நிரந்தரமாய் ஈடுபட்டிருப்பவர்கள் நிரந்தரமாய் வாழக்கூடாதா என்ற ஏக்கத்தின் அதிர்வுதான் அது, செயல் வீரர்களும் கல்விமான்களும் இலக்கிய வாதிகளும் பண்பாட்டாய்வாளர்களும் மிகக் குறைவாக உள்ள சமூகமொன்றில் சாவுபற்றிய சிறு சலசலப்பும் அதிர்ச்சிகளாகவே மாறும்.
ஜெமீலின் மரணமும் அப்படிப்பட்ட சமூக இழப்பாகும். அவரது மரணம் நிச்சயமாக ஒரு இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது. அவரைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கைப் பணிகள் நிறைவு செய்துவிட்டதான ஒரு பூரிப்புடன், அடுத்தகட்ட பயணத்தின் பேரிலான முயற்சிகளில் அவர் இருந்தார். அவரது வாழ்க்கைச் செயற்பாடுகளின் இறுதி இரண்டு வருடங்களை அல்லது ஒரு வருடத்தை பகுப்பாய்வுக்கு உட்படுத்தினால் இது புலனாகும். அப்படியான ஒரு உளநிலை அவருள் உருவாகி இருந்ததாக நான் உணர்கின்றேன். ஆனால், சமூகத்திற்கு அந்த இழப்பு ஒரு இடைவெளி.
ஜெமீல் ஒரு பன்முக ஆளுமை;செயற்திறனில் தொடர்ந்து தன்னை உறுதிப்படுத்தியவர். நிர்வாகத்திறன், ஒழுங்கு முறைமை, நிதானமாக முழுமையாகப் பணிகளை நிறைவேற்றும் மன உறுதி, நேர்மை போன்றவை ஜெமீலை ஒரு ஆளுமையாக நினைக்கும் போது நம் கவனத்திற்கு வருகின்றன. அதிபராக அவர் நிர்வாகப்பணி ஆரம்பமாகி பல்கலைக்கழகப் பதிவாளர், அமைச்சுச் செயலாளர் என பல மட்டங்களுக்கு விரிவுபெற்றுச் செல்கின்றது. இது ஜெமீலின் வாழ்வில் பிரதான அங்கமாகும். அவரது கல்வியும் அவரது இயல்பான திறமைகளும் அவரைப் பல படித்தரங்களுக்கு உயர்த்தின.
அவரது பல்துறை ஈடுபாடுகளும் அவற்றில் அவர் வெளிப்படுத்திய திறமைகளும் அயராத செயற்பாடுகளும் ஒன்று கலந்ததுதான் ஜெமீல். இலக்கிய ஈடுபாடு, பண்பாட்டு ஆய்வு, வரலாற்று ஆய்வு இவ்வித முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்தல் என்று ஜெமீலுக்கு மற்றொரு பக்கம் உண்டு. இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், மலேசியாவிலும் நடைபெற்ற பல இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி சர்வதேச மாநாடுகளில் ஜெமீல் பிரிக்கமுடியாத அங்கமாகச் செயற்பட்டது எம் நினைவுகளில் இருக்கின்றது. ஒரு சர்வதேச முஸ்லிம் இலக்கிய மாநாட்டை நிர்வாக ரீதியாக ஒழுங்கமைக்கும் பொறுப்பினை தயக்கமின்றி அவரிடம் ஒப்படைக்கலாம்.
ஜெமீல் அவர்கள் தமது தொழில் நிமித்தமாக கொழும்பில் குடியேறி வாழ ஆரம்பித்த பின்னர் கொழும்பு வட்டார புத்திஜீவிகளின் இயக்கங்கள், இலக்கிய நடவடிக்கைகள், ஆய்வு முயற்சிகள், கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள், சிறப்புக் கலந்துரையாடல்கள் என அவரது பங்களிப்பு மேலும் விரிவு பெறுகின்றது. கொழும்பில் இயங்கும் பல பொதுச்சேவை மற்றும் ஆயு;வு நிறுவனங்களில் குறிப்பாக ஏ.எம்.ஏ.அஸீஸ் பௌண்டேசன், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனி உள்ளிட்ட பல நிறுவனங்களின் நடவடிக்கைகளினதும், ஆய்வு முயற்சிகளினதும் முக்கிய பங்காளராக ஜெமீல் இருந்துள்ளார்.
ஏ.எம்.ஏ.அஸீஸ் பௌண்டேசனில் 2000 – 2007 காலப்பகுதியில் அதன் தலைவராக பணியாற்றியதோடு 2015ல் அவரது மரணம் நிகழும் வரை அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளிலும் ஏ.எம்.ஏ.அஸீஸின் ஆவணங்கள், அவரது உரைகள், எழுத்துக்களைத் தொகுத்து வெளியிடும் பணிகளிலும் அவர் தொடர்ச்சியாக இயங்கிவந்துள்ளார். ‘ஜெமீலின் மறைவு எமது நிறுவனத்திற்கு சொல்லமுடியாத இழப்பு! நாங்கள் அவரை வைத்துச் செய்வதற்கென பல ஆய்வு மற்றும் நூல் வெளியீட்டு திட்டங்களை கைகளில் வைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. இந்த பொறுப்புக்களை ஏற்கக் கூடிய ஜெமீல் போன்ற இன்னொருவரை தேடி எடுப்பது இலகுவானதல்ல’ என்று அந்த நிறுவனத்தின் முக்கிய பிரமுகரும் ஏ.எம்.ஏ.அஸீஸின் புதல்வருமான அலி அஸீஸ் என்னிடம் கூறினார், தன்னார்வ நிலையில் தனது திறமைகளையும் நிபுணத்துவ சேவைகளையும் பல தொண்டு நிறுவனங்களுக்கு அவர் தொடர்ந்து வழங்கி வந்தார்.
அதுதவிர கொழும்பு ஸாஹிராவின் கல்வி முன்னேற்றம் மற்றும் நிர்வாக கட்டமைப்புக்களை மீள் வடிவமைப்பது பற்றிய ஆய்வு அறிக்கையை தயாரிப்பதில் ஜெமீல் பிரதான பங்கேற்றிருந்தார். அத்தோடு ஸாஹிராவின் முன்னேற்றத்துக்காக உழைத்துவந்த பிரதான அமைப்புக்களில் அவர் ஆலோசகராகத் தொடர்ந்து பல வருடங்கள் சேவையாற்றினார். அதேபோல் அகில இலங்கை முஸ்லிம் கல்விமாநாட்டில் முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்கான பல்வேறு தூதுக்குழுக்கள், ஆய்வுக்குழுக்கள், ஆணைக்குழு என்பவற்றில் அவர் தொடர்ச்சியாக பங்கேற்று ஆலாசனைகளை வழங்கினார்.
அண்மையில் கல்விமாநாடு நியமித்திருந்த முஸ்லிம்களின் தற்போதைய கல்வி நிலைப்பற்றிய விசாரணை ஆணையத்தில் அங்கத்தவராக இருந்ததோடு அந்த ஆணையத்தினால் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தயாரிப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இவையனைத்துமே அவர் வழங்கிய தன்னார்வ, இலவச நிபுணத்துவ சேவைகளாகவே அமைந்திருந்தன.
முஸ்லிம்களின் கலை கலாசார மறுமலர்ச்சி பற்றி அவரிடம் ஆழமான அக்கறை காணப்பட்டது. அதற்கான கருத்துக்களையும் அடிக்கடி அவர் வெளியிட்டு வந்துள்ளார். முஸ்லிம்களின் பண்பாட்டுத் துறையில் முஸ்லிம்களை விழிப்புணர்வு கொள்ளத் தூண்டும் பல உரைகளை அவர் ஆற்றியுள்ளார். கரைத்தீவு அந்தகக்கவி செய்கு அலாவுதீன் பற்றி முஸ்லிம் கலாசார அமைச்சு நூல் வெளியிட்டதிலும் கரைத்தீவில் அந்த நூல் வெளியீடு ஒரு கலாசார விழாவாக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டதிலும் ஜெமீலுக்கு முக்கிய பங்கு இருந்தது.இந்தப்பணிகளில் அவரோடு நானும் சேர்ந்து இயங்கியதால் அவரது சேவைகளை நான் நேரடியாகவே அறிந்திருந்தேன். கரைத்தீவில் உள்ளூர் மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகவும் அழிந்து கொண்டிருக்கும் சில கிராமிய கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதற்காகவும் கொழும்பில் இருந்து கரைத்தீவிற்கு நாங்கள் பல தடவைகள் பிரயாணம் செய்திருக்கின்றோம்.
1998ல் பிராந்திய கலாசார விழாவாகப்புலவரின் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதையொரு எண்ணக்கருவாக விரிவுபடுத்தி இலங்கை முழுவதிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் பிராந்திய முஸ்லிம் கலாசார விழாவாக கொண்டாடுவதற்கான முடிவுகள் முஸ்லிம் கலாசார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு அப்போதையே இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தயாராக இருந்தார்.
இவ்விதப்பணிகளை பெரும்பாலும் உலகியல் சார் கல்வித்துறைகளில் தேர்ச்சிபெற்றவர்களே மேற்கொண்டுவருகின்றார்கள். நவீன கல்வி, பல்கலைக்கழகக்கல்வி என்பவற்றின் சிந்தனைத் தாக்கங்களின் பின்னணியில் இவ்வாறான ஆளுமைகளினையும், கல்வியாளர்களையும், புத்திஜீவிகளையும் சமூகம் பெற்றுக் கொள்கின்றது. டி.பி.ஜாயா,ஏ.எம்.ஏ.அஸீஸ், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் போன்ற தலைவர்கள் நவீன கல்விக்கு உரிமை கோரக் கூடியவர்கள். பதியுதீன் அலிகாரில் கலைத்துறையில் டீ.யுஇ ஆ.யு பட்டங்களை முடித்து இலங்கையில் முஸ்லிம் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றார்.
இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு மறுமலர்ச்சி பற்றி முதலில் பேசியவர்களும் இவர்களே. ஏ.எம்.ஏ.அஸீஸின் காலத்திலேயே கல்வியிலும் பண்பாடு, கலை இலக்கியத் துறைகளிலும் திருப்புமுனைமிக்க காலப்பகுதி உருவாகியதையும் அவாதானிக்க முடிகின்றது. அதன் பிரதான உற்பத்திக் களமாக கொழும்பு ஸாஹிரா விளங்கியது. இந்தப் பாரம்பரியத்தின் மற்றொரு அடையாளம்தான் ஜெமீலும் அவரது பணிகளுமாகும்.
பண்பாட்டைத் தேடுதல், கலைகளின் மறுமலர்ச்சி, பூர்வீகங்களின் வேர்களை அறிதல், கிராமங்களின் கலாசாரங்களை மீளக் காணுதல் போன்ற மீளாக்க மறுமலர்ச்சி உணர்வு பரவியது. இது நவீனகல்வியின் உடன்பயன்களில் ஒன்றாக அமைந்திருந்தமை கவனத்திற்குரிய ஒன்றாகும். எனினும் தோன்றி மறையும் மின்னல்கள் போன்று அந்த உணர்வுகள் விரைவில் மங்கி மறைந்தன.
எனது பார்வையில் இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டின் கூறுகள் அதன் இயங்கு நிலைகள் அவற்றை மீட்டெடுக்கும் எதிர்காலத்தை நோக்கியதான சிந்தனைகள் பற்றிய கருத்துக்களும் கலந்துரையாடல்களும் எம்மிடம் இன்னும் ஆரம்பமட்டத்திலேயே உள்ளன. இந்தத்துறையில் ஏதாவது ஒருவகையில் பங்களிப்புச் செய்தவர்கள் என்று சிலரின் பெயர்களைக் கூறுவதாயிருந்தால் ஜெமீலின் பெயருக்கும் நிச்சயம் அதில் இடமுண்டு. இந்தத்துறையில் இன்னும் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
நவீன கல்வி முஸ்லிம்களிடையே 1890ல் தான் பரவத்தொடங்கியது. படிப்படியாக கல்வி கற்ற ஒரு வகுப்பினர் முஸ்லிம்களிடையே தோற்றம் பெறுகின்றனர். கல்வியும் அதனால் உத்தியோகங்களும் என்ற பொது எதிர்பார்ப்பிற்கு அப்பால் கல்வி கற்றவர்களிடமிருந்து சமூகம் பலவற்றை எதிர்பார்க்கிறது. அது நடைபெறாமல் இல்லை. ஆனால் அது நடைபெறுவதற்கு நமது சமூகத்தில் பல தடைகளும் உள்ளன. தாமாகவே முன்வந்து சமூகச் செயற்பாடுகளிலும் சமூகப் பயனுள்ள பல்வேறு பணிகளிலும் பல கற்றவர்கள் தமது பங்கை வழங்குவதையும் காணமுடிகின்றது.
இது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் தான் ஜெமீல் போன்ற ஆளுமைகளை நோக்கி சமூகத்தின் கவனம் திரும்புகின்றது. வைத்தியக் கல்வியிலும், சட்டக்கல்வியிலும் மட்டுமே முஸ்லிம் செல்வந்த மற்றும் உயர்மத்திய வகுப்பினர் ஆர்வம் காட்டிய காலம் அது.சட்டத்துறையை தேர்வு செய்வதே பொருத்தமானது என்ற குடும்ப அழுத்தமும் ஜெமீலுக்கு இருந்த போதும் பல்கலைக் கழகத்தையும், கலைத்துறையில் பொருளியல் பாடத்தில்சிறப்புப் பட்டப்படிப்பையும் ஜெமீல் தெரிவு செய்தார்.
கொழும்பு ஸாஹிரா அதிபர் ஏ.எம்.ஏ அஸீஸின் தொடர்பும் அவரது ஆலேசனைகளும் ஏற்கனவே ஜெமீலின் கருத்துக்களில் மாற்றங்களையும் எதிர்காலத்திற்கான பாதையையும் தூண்டிவிட்டிருந்தன. பேராதனை பல்கலைக்கழக கல்வியும் இந்த எண்ணங்களோடு ஒன்றிணைந்தபோது உருவாகி இருக்கும் ஜெமீலின்ஆளுமைகள்; என்னவாக இருக்கும் என்பது தெளிவாகிவிட்டது. கொழும்பு ஸாஹிராவும் பல்கலைக்கழக கல்வியும் அவர் கல்விகற்ற ஆரம்பப் பாடசாலைகளும் ஒரு கல்விமானை உலகிற்குத் தருவதில் வெற்றிபெற்றதை நாமும் உறுதியாகத் தெரிந்து கொள்கின்றோம். ஜெமீலின் உருவாக்கத்தை அவரது குடும்ப மற்றும் ஆரம்பக் கல்வி மரபுகளிலிருந்து ஆரம்பிப்பதே பொருத்தமானது.
புகழ் பெற்ற முத்தலிபு வைத்தியரின் மகள் முக்குலத்தும்மாவிற்கும் மீரா லெப்பையின் மகன் ஸாகுல் ஹமீதுக்கும் 1940ல் ஜெமீல் பிறந்தார். முத்தலிபு வைத்தியர் கிழக்கு மாகாணத்தில் பிரபலமான வைத்தியராகத் திகழ்ந்தார். சாய்ந்தமருது 6ம் குறுச்சியில் இருந்த ஓதப்பள்ளிக்கூடத்தில் குர்ஆன் மத்ரசாக் கல்வி ஆரம்பமாகியது. அங்கு சேர்க்கப்படும் போது ஜெமீலுக்கு வயது நான்கு.
1945ம் ஆண்டு காரைத்தீவு இராமகிருஷ்ணமிஷன் ஆண்கள் வித்தியாலயத்தில் ஜெமீலின் பாடசாலைக்கல்வி ஆரம்பமானது. இக்காலத்து தமிழ் முஸ்லிம் உறவு பற்றி ஜெமீல் தமது வாழ்க்கைக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இனவேறுபாடு எதுவுமே உருவெடுத்திராத இனிமையான அக்காலத்தில், இக்கிராமங்களில் மட்டுமல்ல முழு கிழக்குமாகாணத்திலும் முஸ்லிம்களும் தமிழர்களும் எத்கைய வேறுபாடுமின்றி மிக அந்நியோன்யமாக வாழ்ந்தனர். இராமகிருஷ்ண வித்தியாலயம் அருகிலிருந்தது. அதுமட்டுமல்லாது எமது மூத்த வாப்பா முத்தலிபு வைத்தியர் சுவாமி விபுலானந்தரின் மிக நெருங்கிய நண்பராவார். கிழக்கு மாகாணத்தின் இராமகிருஷ்ண பாடசாலைகளின் முகாமையாளராக சுவாமியே பணிபுரிந்து கொண்டிருந்தார். (எஸ்.எச்.எம்.ஜெமீல், ஒரு கிராமத்துச் சிறுவனின் பயணம், 2013)
சுவாமி அங்கு தங்கியிருந்த வேளைகளில் முத்தலிபு வைத்தியர் சுவாமிகளைச் சந்தித்து அவரோடு நீண்ட நேரம் உரையாடுவது வழக்கம். அத்தகைய பல சந்தர்ப்பங்களில் ஜெமீலும்; அவர்களின் உரையாடல்களை கவனித்தவாறு அங்கிருந்துள்ளார்.
பின்னர் ஜெமீல் கல்முனை சென்மேரிஸ் ஆங்கிலப்பாடசாலையில் 1950ல் அனுமதிக்கப்படுகின்றார். அப்போது அருட்திருச்சகோதரர் எம். இமானுவேல் அப்பாடசலையின் அதிபராகப் பணியாற்றினார். 1952ம் ஆண்டில் இப்பாடசாலையின் பெயர் பாத்திமா கல்லூரி என மாற்றப்பட்டது. இன்று இது கார்மேல்–பாத்திமா கல்லூரி என அழைக்கப்படுகின்றது. தான் அப்பாடசாலையில் சேர்ந்தபோது தனக்கு நிகழ்ந்த மனதை நிகழ்விக்கும் சம்பவமொன்றை ஜெமீல் பன்வருமாறு நினைவு கூருகின்றார்.
சில நிமிடங்களின் பின்னர் 5ம் வகுப்பாசிரியரான அருட்சகோதரர் அங்கு வந்தார். அங்கிருந்த அதிகாரி இவரை வகுப்புக்கு அழைத்துச் செல் என்றார். அருட்சகோதரர் சபரிமுத்து புன்முறுவலோடு எனது கையைப்பிடித்து ‘Come child’எனக் கூறி வகுப்புக்கு அழைத்துச் சென்று இவர் இன்று முதல் உங்களில் ஒருவராக சேர்ந்து கொள்கின்றார். இவரது பெயர் ஜெமீல் என அறிமுகப்படுத்தி ஆசனத்தில் அமர்த்தினார்.
சபரிமுத்து பிரதர் என் கையைப் பற்றிப்பிடித்து அழைத்துச் சென்றமையானது கார்மேல் பாத்திமா கல்லூரியில் இன்றுவரை என்னை மானசீகமாகப்பிணைத்துள்ளது.
1956ம் ஆண்டு பாத்திமாக் கல்லூரியில் எஸ்.எஸ்.சி பரீட்சையில் தோற்றி ஜெமீல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்கின்றார். பின்னர், அவர் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர்; அதற்கு அப்போதிருந்த எச்.எஸ்.சி வகுப்பில் சித்திபெறவேண்டும் அதற்காக பெற்றோரும் அவரது குடும்பமும் கொழும்பு ஸாஹிராவைத்; தெரிவு செய்கின்றனர். 1957ம் ஆண்டு பெப்பரவரி மாதம் கொழும்பு ஸாஹிராக்கல்லூரியில் ஜெமீல் சேர்க்கப்படுகின்றார். ‘சேர்விலக்கம் 11367 ஆகும். அப்போது பாடசாலைக் கட்டணம் 5ரூபாய், விடுதிக் கட்டணம் 60 ரூபாய், அவ்வளவுதான்’ என்று இதை ஜெமீல் தனது குறிப்புக்களில் பதிவு செய்துள்ளார்.
இக்காலத்தில் ஸாஹிராக்கல்லூரியில் எம்.எல்.ஏ.காதர், ஆசாத் மௌலானா, காத்தான்குடி ஏ.சி.எல்.அமீரலி, புத்தளம் எஸ்.ஏ.எம்.நாளிர், தர்காநகர் ஐ.எல்.எம்.ஷாபி, மாத்தறை எம்.ஏ.எம்.சுக்ரி (கலாநிதி) போன்றவர்களோடு தனது ஸாஹிரா வாழ்வு ஆரம்பித்ததாக ஜெமீல் கூறுகின்றார். அப்போது எஸ்.செல்வநாயகம், கா.சிவத்தம்பி, ஏ.எம்.சமீம், எம்.எம்.எம்.மஹ்றூப், ஐ.எல்.எம்.சுஐப், பி.பாலசிங்கம், சண்முகரத்தினம் போன்றோர் ஜெமீலின் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். இளைஞர் ஜெமீலின் எதிர் காலத்தைத் தீர்மானித்த கொழும்பு ஸாஹிராயுகம் என இதனைக் கூறலாம். அன்றைய ஸாஹிராவின் பெருமையைப் பற்றி எஸ்.எச்.எம்.ஜெமீல் பின்வருமாறு கூறுகின்றார்.
டி.பி.ஜயா அதிபராக இருந்து கால் நூற்றாண்டு காலத்தில் கட்டியெழுப்பி அஸீஸ் அவர்களுடைய 13வருடகாலத்தில் அதன் உச்சகட்டத்தை அடைந்த ஸாஹிராவின் மாணவர்களாய் இருக்க எமக்குக் கிடைத்தது பெரும் பாக்கியமே ஆகும். அக்காலகட்டத்தில் கல்வித்துறை, பல்கலைக்கழக அனுமதி, கலை, கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு, சாரணர்குழு, கடற்படை, கிறிக்கெற், உதைபந்தாட்டம், துப்பாக்கிசுடுதல், விவாதப்போட்டிகள் போன்ற எல்லாத் துறைகளிலும் ஸாஹிரா சிறப்புற்று விளங்கியது.
ஸாஹிராவில் பயின்ற காலத்தில் பல்வேறு இலக்கியச் செயற்பாடுகளில் ஜெமீல் பங்கேற்கிறார். அதிலொன்று வானொலி உடனான அவரது தொடர்பு. கார்திகேசு சிவத்தம்பி (பேராசிரியர்) ‘இளைஞர் மன்றம்’ நிகழ்ச்சியை வானொலியில் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் ஸாஹிரா சார்பில் ஜெமீலும் அவரது நண்பர்களும் அதில் பங்கேற்று வந்தனர். நிகழ்ச்சிகள் முடிந்து அங்குள்ள சிற்றூண்டிச் சாலையில் கா.சிவத்தம்பி அவர்களின் விருந்துபசாரத்தையும் அனுபவித்து அங்கிருந்து வெளியேறுவதாக ஜெமீல் கூறுகின்றார். அக்காலத்தில் ஜெமீலும் அமீரலியும் (பேராசிரியர்) பல வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
1960ம் ஆண்டு இலங்கைப் பல்கலைகழகத்தில் ஜெமீல் அனுமதிக்கப்படுகின்றார். அவ்வாண்டு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலிருந்து ஆறு பேர் கலைப்பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யபட்டனர். பல்கலைக்கழக வாழ்வில் ஜெமீல் மீண்டும் கலை இலக்கிய பாரம்பரியங்களோடு சம்மந்தப்படும் சந்தர்ப்பத்தைப் பெறுகின்றார். பல்கலைகழக தமிழ்ச் சங்கம் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்புக்களிலும் இணைந்து பல்வேறு கலை இலக்கிய பணிகளிலும் பத்திரிகைத்துறைப் பணிகளிலும் சம்மந்தப்படும் வாய்ப்பு ஜெமீலுக்கு கிடைக்கின்றது.
1961ல் தமிழ் பாடத்தில் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்று பிரான்ஸிஸ் கிங்ஸ் பெரி விருதினைச் சுவீகரிக்கின்றார். முஸ்லிம் மஜ்லிஸ் செயலாளராகவும், தமிழ்ச் சங்கப் பொருளாளராகவும் அச்சகங்களின் வளர்ச்சியில் பங்கேற்கிறார். பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தில் தனது ஈடுபாட்டினை அவர் பின்வருமாறு கூறுகிறார்: ‘பல்கலைக்கழக தமிழ்ச் சங்க நடவடிக்கைகளில் நாங்கள் உற்சாகமாகப் பங்குபற்றி அதன் கலைவிழாக்கள்,‘இளங்கதிர் சஞ்சிகை’வெளியீடு என்பவற்றில் அதிகம் ஈடுபடுவோம்’. அதேவேளை, 1960 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில கலை இலக்கிய முயற்சிகளில் உச்சகட்டத்தில் இருந்தது. பாரம்பரிய கூத்துக்களும் நவீன பாணி மேடை நாடகங்களும் நாடக மற்றும் இசைப்பரிசோதனைகளும் சிங்கள இலக்கிய மறுமலர்ச்சிச் சிந்தனைகளும் இடம்பெற்று வந்த காலம்.
இக்காலத்தில் தான் பேராசிரியர் சரச்சந்திர, ரோசிரியர்.வித்தியானந்தன், மௌனகுரு (தற்போது பேராசிரியர்) போன்றோரின் நாடக மற்றும் அரங்கியல் முயற்சிகளுக்குப் பேராதனை பிரதான மையமாகப் விளங்கியது. தமிழ் மாணவர்கள் மத்தியிலும் இக் காலத்தில் நடைபெற்றுவந்த கலை இலக்கிய மற்றும் அரங்கியல் எழுச்சியினையும் ஜெமீல் மிகவும் ஆழமாக அவதானித்து வந்துள்ளார். பேராதனை பல்கலை வாழ்க்கை பற்றிய அவருடைய இந்த கலாசார எழுச்சிகள் அவரது வாழ்க்கைக் குறிப்புக்களில் விரிவாகப் பதிவாகியுள்ளன.
1971ம் ஆண்டு பொருளியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்கின்றார். பின்னர், 1990ல் யாழ்ப்பாணத்தில் கல்வியியல் முதுகலைமானிப் படிப்புக்காக மீண்டும் தனது பல்கலைக்கழக கல்வி வாழ்க்கையை யாழ் பல்கலையில் ஜெமீல் ஆரம்பிக்கின்றார்.
தனது வாழ்வின் சகல அன்றாட நிகழ்வுகளையும் அவர் பதிவு செய்து வந்தார். அவரது வாழ்க்கை வரலாறும் சரி 19, 20ம் நூற்றாண்டுகால முஸ்லிம்களின் வரலாறு, கல்வி, பண்பாடு பற்றிய வரலாற்றுத் தகவல்களும்; சரி அவற்றை அவர் கவனமாக நினைவில் வைத்திருந்தார். அவை பற்றி தகவல்களையும் முடிந்த அளவு ஆவணங்களையும் அவர் பாதுகாத்து வந்தார். அதற்கு அப்பால் ஆவணக்காப்பகம், கொழும்புத் தேசிய நூலகம்;, கொழும்பு ஸாஹிரா நூலகம,; போர்த்துக்கேய,ஒல்லாந்த, ஆங்கிலேயே ஆவணக்காப்பகங்கள் எல்லாவற்றிலும் தகவல்களைப் பெற தனது நேரத்தை அவர் செலவிட்டுள்ளார்.
1966ம் ஆண்டுசித்தி ஆரிபா ஜெமீல் திருமணம் நடைபெறுகின்றது. திருமணப்பந்தத்தின் ஊடாகவும் ஜெமீல் ஆய்வுப்பணிகளில் இன்னொரு பாதியை உருவாக்கிக் கொள்கின்றார். அவரது ஆய்வு முயற்சிகளில் மனைவி சித்தி ஆரிபாவின் உதவிகளுக்கும் பங்கு இருந்தது. இது பற்றி பல இடங்களில் ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.
1966ல் விவாகம் முடிந்த காலத்திலிருந்து கட்டுரைகளை சொல்வதெழுதுதல், படியெடுத்தல்,பல்வேறு நூல்களிலிருந்து தேவையான குறிப்புக்களை பெற்றுத்தருதல் போன்ற பணிகள் மூலம் எனது மனைவி உதவி வருகின்றார் என அவர் கூறுகின்றார். நாட்கணக்கில் கொழும்பு ஆவணக் காப்பகத்தில் தேடுதல்களில் ஈடுபட்டு நூல் பெயர் விபரங்களை அட்டைகளில் பதிவு செய்து தருவது போன்ற பல உதவிகளை அவர் செய்ததாக சுவடியாற்றுப்படை நூலில் அவர் பதிவு செய்துள்ளார். எனினும் சித்தி ஆரிபாவின் பங்களிப்பு இதனிலும் அதிகமானதாகும். ஒரு கல்விமானாகவும் ஆய்வாளனாகவும் சிறந்த நிர்வாகியாகவும் ஜெமீல் மெருகுப்பெற்று வளர்வதற்கு சித்தி ஆரிபாவின் அன்பும் கவனிப்பும் நிழல் போல் தொடர்ந்ததை இங்கு நாம் நினைவுபடுத்தாதிருக்க முடியாது.
ஒல்லாந்த ஆவணக்காப்பகத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தொன்மை வரலாற்றை எழுதுவதற்காக அங்கிருந்த ஆவணக் கோப்புகளில் நீண்ட நேரத்தைச் செலவிட்டது பற்றி ஒருமுறை என்னிடம் கூறினார். அங்கு பெற்ற குறிப்புக்களை ஒழுங்கு முறையாகத் தொகுத்து வந்ததாகவும் 18ம், 17ம் நூண்றாண்டுகளுக்கு முற்பட்ட தகவல்களைத் திரட்டுவதிலேயேதான் அதிக அக்கறை காட்டியதாகவும்; குறிப்பிட்டார். தொன்மை வரலாற்று நிகழ்வுகளைப்; பார்க்க ஆசைப்பட்ட தனக்கு எதிர்பார்த்த அளவு முஸ்லிம்கள் பற்றிய தகவல்கள் பெறமுடியாமற் போனதால் அந்த ஆய்வை கைவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களின் வரலாற்று எழுத்தியல் முயற்சியில் அவருக்கு பல கனவுகளும் இலட்சியங்களும் இருந்தன. ‘இலங்கை முஸ்லிம்களின் வரலாறு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையோ நூலோ அவர் எழுதவில்லை. ஆயினும் அந்தத்துறையில் கருத்துக் கூறவும் விவாதிக்கவும் தகவல்களைப் பெற்றுத்தரவும் அவரால் முடிந்தது. முஸ்லிம்கள் பற்றியவரலாற்று நூல்களை வாசிப்பதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
பின்னர், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம் வரலாற்றை எழுத உதவுவது, தகவல்களைச் சேகரிப்பது போன்ற பணிகளில் அவர் நேரடியாகவே பங்கேற்றார். முஸ்லிம் கலாசார அமைச்சில் ஜெமீல் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதி முஸ்லிம்களின் வரலாறு மற்றும் பண்பாட்டு எழுத்துக்களுக்கும் கலை மறுமலர்ச்சிக்கும் கலைஞர் கௌரவிப்புக்களுக்கும் ஒரு பொற்காலமாக இருந்தது. பேராசிரியர். உவைஸ், எஸ்.எம்.கமால்தீன், எம்.எம்.எம்.மஹ்றூப் கலைவாதி கலீல் என ஆய்வாளர்களும் கலைஞர்களும் தமக்குத்தரப்பட்ட பணிகளைச் செய்வதற்காக அடிக்கடி அந்த அமைச்சிற்கு வந்து போய்க்கொண்டிருந்தனர்.
‘அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்’ என்ற வரலாற்று நூல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் 1992ல் வெளியிடப்பட்டது. அப்போதிருந்த இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களின் வழிகாட்டலில் இவ்வகையான பல எழுத்து முயற்சிகள் நடைபெற்றன. அமைச்சின்; இணைப்பாளராக மட்டுமன்றி அமைச்சு அளவிலும் தனிப்பட்ட ரீதியிலும் இவ்வெழுத்து முயற்சிகள் வெற்றிபெற அவர் கடுமையாக உழைத்தார்.
அறிஞர்களையும் கலைஞர்களையும் வரவேற்பதிலும் அவர்களைக் கௌரவித்து அவர்களின் அறிவு உழைப்பைப் பெற்றுக்கொள்வதிலும் அப்போது அந்த அமைச்சில் தரப்பட்ட முக்கியத்துவத்தை இன்னொரு காலப்பகுதியில் காண்பது கடினமானது.
1992ல் ‘அநுராதபுர மாவட்ட வரலாறு’எழுதப்படும் போது அமைச்சில் நடந்த பல கலந்துரையாடல்களில் அதன் ஆய்வாளர்கள் அடிக்கடி கலந்து கொண்டனர். வரலாற்றாய்வாளர். மரீனா இஸ்மாயில்,எம்.எம்.எம் மஹ்ரூப், பேராசிரியர். உவைஸ், எஸ்.எம்.கமால்தீன், எம்.எஸ்.எம்.அனஸ் ஆகியோருடன் ஜெமீல் பிரதான தொடர்பாளராகவும் கட்டுரைகளை நெறிப்படுத்துபவராகவும் கலந்து கொண்டார். பின்னர் புத்தளம் மாவட்ட வரலாறு எழுதப்பட்டபோது அந்த நூலின் பதிப்பாசிரியர் பொறுப்பினை அவர் ஏற்றிருந்தார். புத்தளம் மாவட்ட வரலாற்றுத் தகவல்களைச் சேகரிப்பதிலும் கட்டுரை எழுதுவோருக்கு வழிகாட்டுவதிலும் ஊக்கப்படுத்துவதிலும் சளைக்காமல் ஈடுபட்டார். முஸ்லிம் பண்பாட்டு அமைச்சினதும் ஜெமீலினதும் அயராத முயற்சிகளின் பயனாக ‘புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள்’ எனும் வரலாற்று நூல் 2001ல் வெளிவந்தது.
இவ்வாறு வரலாரற்றிருந்த மாவட்டங்களுக்கான வரலாற்றுப் பதிவுகள் அடுத்தடுத்து நூலுருப்பெற்றன. இதன் வெற்றிக்கு ஜெமீலின் உழைப்பினதும் ஈடுபாட்டினதும் வகிபங்கு மிக முக்கியமானதாகும். இத்தொடரில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (1997), கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் (1998) வரலாற்று நூல்களும் அடங்கும். இலங்கையின் தேசிய வரலாற்றில் எவ்விதத்திலும் இரண்டாம்பட்சமில்லாத செழுமையான வரலாற்றுத் தொன்மை முஸ்லிம்களின் மரபுரிமையாக இருந்தது. ஆயினும், அது ஆவணப்படுத்தப்படாத ஒரு அபாய நிலை காணப்பட்டது.இக்காலப்பகுதியில் தான் இந்த வரலாற்றுப்பதிவு முயற்சிகள் நடைபெற்றன. ‘அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்’ நூலுக்கான பதிப்புரையில் ஜெமீல் பின்வருமாறு எழுதியுள்ளார்.
இலங்கையின் தேசிய வாழ்வில் அல்லது இதர இனங்களில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்ளாத முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு வழங்கிய பங்களிப்புக்கள் பலவாகும். எனினும் தமது வர்த்தக நடவடிக்கைகளில் கண்ணும் கருத்துமாக இருந்த காரணத்தினால் கல்வி நிலையில் பின்தங்கி இருந்ததனாலும் தமது வரலாற்றுப் பதிவுகளைப் பேணுவதில் அவர்கள்சிரத்தையாக இருந்து விட்டனர். (பதிப்புரை, அநுராதபுரமாவட்ட முஸ்லிம்கள,; 1992)
வரலாற்றைத் தேடுவதிலும் பண்பாட்டு முதுசம்களைப் பாதுகாப்பதிலும் முஸ்லிம்களிடையே சொல்வதற்குக் கடினமான பின்னடைவு காணப்பட்டுள்ளது. இன்றும் காணப்படுகின்றது. வரலாறு ஆராய்ச்சி மனோபாவமோ இன்னும் தூரத்துக் கனவாகவே காட்சி தருகின்றது. வரலாற்று அறிவிற்கான பண்பாட்டு அழுத்தமோ இன்னும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. இதுபற்றி ஜெமீல்கூறுவதையும் இங்கு நோக்குவோம்.
இந்நூற்றாண்டின் ஆரம்ப காலத் தசாப்தங்களில் கல்வித்துறையில் முஸ்லிம்கள் பின்னிலையில் இருந்தது போன்று தமது வரலாறு, வாழ்வியல், பண்பாடு என்பவற்றினைப் பதிவு செய்வதிலும் பின்னின்றனர். ஓரிரு பதிவுகள் செய்யப்பட்டாலும் அவை சேர். அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன், எமர்சன்டெனன்ட் போன்ற ஆங்கிலேயராலேயே செய்யப்பட்டன. (பதிப்புரை,கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள், 1998)
ஜெமீல், அடிப்படையில் நவீன கல்வி, பாடசாலை நிர்வாகம், ஆசிரியப்பயிற்சிக் கலாசாலை நிர்வாகம் என்பவற்றோடு நெருக்கமாகச் செயற்பட்டவர். 1967ம் ஆண்டு சாய்ந்தமருது முஸ்லிம் மாகாவித்தியாலயம் கல்முனை ஸாஹிராக் கல்லூரியாக மாற்றம் பெறுவதிலிருந்து பாடசாலைக் கல்வி முன்னேற்றத்துக்கான எல்லாத்துறைகளை நோக்கியும் ஜெமீலின் கவனம் திரும்புகின்றது. 1975-1979, ஆகிய இரு காலகட்டங்களில் கல்முனை ஸாஹிராவில் ஜெமீலின் கல்வி இலட்சியங்களும் பங்களிப்புக்களும் ஒன்றிணைகின்றன.
ஜெமீலின் வாழ்வில் 1965 முக்கியமான ஆண்டு. தொழில் அனுமதிப்பத்திரத்தைப் பெற்று இங்கிலாந்தில் குடியேறுவதா அல்லது உள்நாட்டில,; கிழக்கு மாகாணத்தில் கல்விப்பணி ஆற்றுவதா என்ற மனப் போராட்டத்திற்கு தீர்வுகாணவேண்டியிருந்தது. இங்கிலாந்து செல்லும் வாய்ப்பைக் கைவிட்டு குடும்பத்தவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப சாய்ந்தமருது முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக ஜெமீல் நியமனம் பெறுகிறார். நவீன பாடசாலைக்கான மாற்றங்கள் வழிகாட்டல்கள் என்ன என்பதை ஜெமீல் நன்கறிந்திருந்தார். ஸாஹிராக் கல்லூரி என்ற பெயர் மாற்றம், பாடசாலையின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பாடசாலைப் பொதுநலசபை, கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா, கற்றல் கற்பித்தலில் மாற்றங்கள், பாடசாலைச் சீருடை, விளையாட்டு, ஒழுக்க மேம்பாடு, எனப் பல்வேறு துறைகளில் புதிய மாற்றங்கள் நிகழ்கின்றன. அதிபர் என்ற நிலையில் கல்முனை ஸாஹிராவின் கல்வி முன்னேற்றத்தின் முதுகெலும்பாக ஜெமீல் செயற்பட்டார்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பல்வேறு பண்பாட்டு இலக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்று அதனால் தூண்டப்பட்டிருந்த ஜெமீல் வகுப்பறைக்கு அப்பாலான பல நடவடிக்கைகளில் கல்முனை ஸாஹிரா மாணவர்களை வழிநடத்தினார்.
1965ல் அவரின் வழிகாட்டலில் வெளிவந்த ‘மாணவமஞ்சரி’ பாடசாலை மட்டத்தில் வெளிவந்த முக்கிய இலக்கிய சஞ்சிகையாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் எழுத்தாற்றலை மேம்படுத்துவதற்காகவும் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும் மாணவமஞ்சரி சஞ்சிகையை பாடசாலை பயன்படுத்தியது.
1975ல் இரண்டாவது முறை அதிபரான போது ‘ஸாஹிரா’ என்ற மாதாந்தப் பத்திரிகை வெளிவருவதற்கு மாணவர்களிடையே ஜெமீல் தூண்டுதலை உருவாக்கினார். 1976ம் ஆண்டு‘ஸாஹிரா’ பத்திரிகை வெளிவந்தது. ‘பூரணத்துவம் பெற்ற ஒரு கல்லூரியாகக் கல்முனை ஸாஹிரா வளரவேண்டும் எனும் எமது இலட்சியத்தில் நாம் இன்னுமொருபடி ஏறிவிட்டோம்’ என்று ஜெமீல் அப்பத்திரிகையில் எழுதியிருந்தார்.
1971ல் நிந்தவூர் வட்டாரக் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1972ல் பரீட்சைத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகப் பதவி ஏற்றார். 1978ம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் பேராளர் மாநாடு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற போது ஜெமீல் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அக்காலத்தில் நாடளாவிய ரீதியல் ஆசிரியர்கள் அதிபர்களுக்கான சிறப்புக் கருத்தரங்குகளை ஆசிரிய சங்கம் நடத்தி வந்தது. கல்விக் கோட்பாடு, நிர்வாகம், கற்பித்தல் முறைகள் பற்றி இக்கருத்தரங்குகளில் துறைசார் நிபுணர்கள் விளக்கங்களை வழங்கினர். இந்தக் கருத்தரங்குகள் வெற்றி பெறத்தேவையான ஏற்பாடுகளைச் செய்ததோடு நாட்டின் பலபாகங்களுக்கும் பயணம் செய்து இக்கருத்தரங்குகளில் ஜெமீல் கலந்து கொண்டார். இலங்கை முஸ்லிம்களில் கல்வி நிலைபற்றியும் கல்வி மேம்பாட்டிற்கான வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கச் செய்யும் சந்தர்ப்பத்தை இக்கருத்தரங்குத் தொடரும் தலைமைப் பதவியும் அவருக்கு வழங்கியது.
1982ல் அட்டாளைச் சேனை ஆசிரியர் கலாசாலையின் அதிபர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அப்போது ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஏற்பட்டிருந்த சில முறைப்பாடுகளையும் குறைபாடுகளையும் ஒழுங்கமைக்கும் பொறுப்பு ஜெமீலிடம் ஒப்படைக்கப்பட்டது. சில வருடங்களாகத் தடைப்பட்டிருந்த ‘கலை அமுதம்’ கல்லூரி சஞ்சிகை
1982 லிருந்து மீண்டும் வெளிவந்ததுடன் ஆசிரியப் பயிற்சியாளர்கள் எதிர் நோக்கிய பல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் காணப்பட்டன.
1960 களில் கவிதைகள், சிறுகதைகள் சிலவற்றை ஜெமீல் எழுதிவந்துள்ள போதும் அவரது கவனமும் ஆராய்ச்சி மனோபாவமும், வரலாறு, இலக்கியம், கல்வி, பண்பாடு நாட்டாரியல் போன்ற துறைகளை நோக்கித் திரும்பியது. ஜெமீல் விருப்பத்தோடு செய்த ஆராய்ச்சி செயற்பாடுகளில் கல்வித்துறை எழுத்துக்களையும், பண்பாட்டுப் பதிவுகளையும் நாட்டாரியல் ஆய்வுகளையும் முக்கியமாகக் குறிப்பிடலாம்.
1980ல் வெளிவந்த ‘ஏ.ஏம்.ஏ அஸீஸின் கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும்’ நூலும், 1990ல் வெளிவந்த ‘கல்விச் சிந்தனைகள்’ என்ற நூலும், கல்வி தொடர்பான அவரது முக்கிய இரு நூல்களாகும். உள்ளூர் முஸ்லிம் சிந்தனையாளர்களை பல்கலைக்கழக உயர்மட்ட பட்டப்படிப்புக்காக பயன்படுத்தும் புதிய போக்கினை 1990ல் வெளிவந்த ஏ.எம்.ஏ அஸீஸ் கல்விச் சிந்தனை நூல் அடையாளப்படுத்துகின்றது. ஏ.எம்.ஏ அஸீஸ் பற்றி பல்கலைக்கழக முது கலைமானிப் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட முதல் ஆய்வுக்கட்டுரையாகவும் இதனை நோக்குவோம்.
அஸீஸின் கல்விச் சிந்தனைகளைப் பட்டப்பின்படிப்பு ஆய்வுக்காக எடுத்துக் கொண்டதில் ஏ.எம்.ஏ அஸீஸ் மீது ஜெமீல் வைத்திருந்த அபிமானமும் ஒரு முக்கிய காரணம் எனலாம். கொழும்பு ஸஹிராக் கல்லூரியின் அதிபராக அஸீஸ் பணியாற்றிய காலத்தில் ஜெமீல் ஸாஹிராவில் கல்வி பயின்றார். அஸீஸின் ஆளுமையினாலும் சிறந்த பழக்க வழக்கங்களினாலும் அவரது மாணவர்கள் இலகுவில் அஸீஸினால் கவரப்பட்டனர். ஜெமீலும் அவ்வாறு கவரப்பட்டவர்களில்; ஒருவர். தன்னைக் கவர்ந்த தனது அதிபர் பற்றி ஜெமீல் இவ்வாறு கூறுகிறார்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக மட்டுமன்றி அக்கல்லூரி மாணவர்களின் மானசீக உதாரண புருசராகவும் விளங்கியவர் அஸீஸ் அவர்களாகும். அவரது கம்பீரம், கவர்ச்சி, பேச்சு, பண்பு, ஆளுமை என்பன யாவும் மாணவரது விழுமியங்களிற் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. (எஸ்.எச்.எம் ஜெமீல்,ஏ.எம்.ஏ அஸீஸ்,கல்விச் சிந்தனைகளும்: பங்களிப்பும், 1980)
ஜெமீலின் வாழ்க்கைச் செயற்பாடுகளிலும் அவரது கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளிலும் ஏ.எம்.ஏ.அஸீஸின் தாக்கம் இருந்தது. மேலும் ஜெமீலின் எதிர்கால கல்விப் பாதையை சீர்படுத்தியதிலும்; அஸீஸிற்கு ஒரு பங்கு இருந்தது. சட்டக் கல்லூரிக்கு செல்லத் தயாராக இருந்த ஜெமீலை பல்கலைக்கழகத்தை நோக்கி அஸீஸ் திருப்பினார். ‘ஜெமீல், உனக்குரிய கல்வி பல்கலைக்கழக வகுப்பறைகளிலேயே இருக்கின்றது’ என்று அஸீஸ் ஜெமீலை நெறிப்படுத்தினார்.
‘அஸீஸ் கல்விச் சிந்தனைகளும் பங்களிப்புக்களும்’ எனும் நூல் உள்ளூர் சிந்தனையாளர் ஒருவரின் கல்விக் கொள்கைகளை ஆராயும் ஆக்கமாகும். ஏ.எம்.ஏ.அஸீஸின் ஸாஹிரா சகாப்தம், இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கு கலாநிதி எம்.எம்.ஏ.அஸீஸின் கனவான பணிகளையும் அவரது முஸ்லிம் கலாசார நிலையம்; பற்றியும் அஸீஸின் பரந்த கல்விக் கொள்கைகள் பற்றியும்நல்ல விளக்கங்களை அந்நூலில் தந்துள்ளார்.
பதினொரு அத்தியாயங்களைக் கொண்ட அந்நூலில் பெண் கல்வி என்ற அத்தியாயம் எமது கவனத்தைக் கவர்கிறது. இலங்கையில் முஸ்லிம் பெண் கல்விக்கான சுதந்திர வாய்ப்புக்களை உருவாக்கிய முன்னோடியாக விளங்கியவர் அறிஞர் எம்.சி.சித்திலெப்பை. அதன் பின்னர் இலங்கையில் அடுத்தடுத்து வந்த எல்லா முஸ்லிம் தலைவர்களதும் கவனத்தை பெண்கல்வி பெற்று வந்ததை இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. இதற்கான சிறந்த சான்றாக அந்த நூலின் 11ஆம் அத்தியாயம் அமைந்துள்ளது.
பெண் கல்வி பற்றிய அந்த அத்தியாயம் பின்வரும் கருத்தை வலியுறுத்துகிறது. ‘அறிவைத் தேடுதல் ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண்களின் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது. எமது நாயகம் (ஸல்) அவர்களின் பணிப்புரை இதுவாகும். ஆனால,; எங்கள் பெண்களுக்குக் கல்வி அவசியமா இல்லையா என்பதைப் பற்றி இன்னும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று ஏ. எம். ஏ. அஸீஸ் 1939 இல் ஆற்றிய உரையின் ஒரு பகுதியுடன்; தான் ஜெமீலின் 11ஆவது அத்தியாயம் ஆரம்பமாகிறது. பெண் கல்விக்காகவும் முஸ்லிம் பெண் ஆசிரியைகளை உருவாக்குவதற்காகவும் அஸீஸ் அரசாங்க உயர் மட்டத்துடன் இணைந்து எடுத்த பல நடவடிக்கைகளைப் பற்றி ஜெமீல் அவ் அத்தியாயத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
‘கல்விச் சிந்தனைகள்’ கல்வி பற்றிய மற்றொரு முக்கிய நூலாகும். இது 1990 ல் வெளி வந்தது அதில் உள்ள 10 கட்டுரைகள் கல்வி பற்றி எழுதப்பட்டவை. உள்ளூர்ப்பாடசாலைகளைத் தரமுயர்த்தல், ஆசிரியரின் பொறுப்புக்கள், அதிபர்களின் நிர்வாகத் தொழிற்பாடுகள் மாணவர்களின் திறமைகள் பற்றி ஜெமீல் தனது சொந்த அனுபவங்களை இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆசிரியர் தொழிலைப் புதிதாக ஆரம்பிக்கும் இளைஞர்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய பல நடைமுறைகளையும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் ஜெமீல் இதில் அழகாகக் கையாண்டுள்ளார்.
கற்றலும் நினைவாற்றலும் என்ற கட்டுரை உயர்வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும்; படிக்க வேண்டிய கட்டுரையாகும். படிப்பதை நினைவில் வைத்திருப்பது எவ்வாறு அதில் எழும் பிரச்சினைகள் என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, என்பதை மிக எளிமையான முறையில் எழுதியுள்ளார். இக்கட்டுரை ‘வளர்மதி’ சஞ்சிகையில் 1976ல் வெளிவந்துள்ளது. ‘கல்வியும் கால மாற்றமும்’ என்ற கட்டுரையில் கல்முனைப் பிரதேசப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியில் தனக்கிருந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
எங்கு நல்லாசிரியர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்கிறார்களோ அவ்விடத்தில் கல்வி நிலை சிறப்பாயிருக்கும். ஏனையவிடத்தில் நிலைமை மோசமாக இருக்கும். இதை உணராத பெற்றோர் இன்னும் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணக் கல்லூரிகளே சிறந்தவை எமது மகாவித்தியாலயங்கள் மோசமானவை என நினைக்கின்றனர். உண்மை நிலை அவ்வாறல்ல. இந்நாட்டின் எந்தவொரு சிறந்த கல்லூரியோடும் ஈடு கொடுக்கக்கூடிய சில மகாவித்தியாலயங்கள் எமது பகுதியிலும் உள்ளன.
ஜெமீலின் மனதில் எப்போதும் இருந்து வந்ததும் அவருக்குப் பெரிய மன நிறைவைத் தந்ததுவமான இலக்கியப் பணி அவரது ‘சுவடியாற்றுப்படை’ ஆக்கமாகும். இது வாசகர்களின் அதிக கவனத்தைப் பெற்ற நூல் அல்ல. எனினும,; இது ஜெமீலின் வாழ்நாள் முயற்சிகளில் ஒன்றாகவும் அவரது எழுத்து முயற்சிகளில் தவிர்க்க முடியாததாகவும் அவரில் ஒன்றிணைந்திருந்தது.
‘சுவடியாற்றுப்படை’ நூல் இலங்கையில் முஸ்லிம்கள் எழுதி வெளியிட்ட நூல்களின்; விபரப்பட்டியலாகும். 1860ஆம் ஆண்டளவில் முதலில் வெளிவந்த நூலில் இருந்து 2000ம் ஆண்டு வரையிலான நூல்களின் பதிவுகளை 4 பாகங்களாக ஜெமீல் வெளியிட்டுள்ளார். பண்டைய இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றி அறிய விரும்புவோருக்கும் ஆய்வாரள்களுக்கும் இந்நூல் பயனுள்ள வழிகாட்டி என்று பேராசிரியர் ம.மு. உவைஸ் குறிப்பிடுகின்றார்.
இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை மூத்த நூலகவியல் அறிஞர் எஸ்.எம் கமால்தீன் கூறும் பின்வரும் கூற்றிலிருந்து நாம் நன்கு உணர முடியும்.
இஸ்லாமிய இலக்கிய ஆக்கங்களுக்கான முழுமையானதொரு பட்டியலை தயாரிக்கும் பாரிய பணியினை யார் மேற்கொள்ள முன் வருவாரென நான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். இவ்வகையில் தற்போது ஜெமீல் அவர்களின் ஆர்வமிக்க ஈடுபாட்டினைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். (பதிப்புரை (எஸ்.எம்.கமால்தீன்) சுவடி ஆற்றுப்படை, 1995)
இலங்கை முஸ்லிம்களின் ஆக்கங்களைப் பற்றிய தகவல்களைப் பெறமுடியாதுள்ள சூழலில் ஜெமீலின் இப்பணி ஆய்வாளருக்கும் நூலகங்களுக்கும் சிறந்த பயன்களைப் பெற்றுத் தரும் என்றும் எஸ்.எம்.கமால்தீன் கூறுகிறார். நூற்பட்டியல் தயாரிப்பது நூலகர்களின் பொறுப்பில் நடைபெற வேண்டிய கடினமான பணி.தனிநபராக இதனை ஜெமீல் மேற்கொண்டிருந்தார். நூல் பட்டியல் தயாரிக்கும் இந்த பணியின் மீது எவ்வாறு தனக்கு ஈடுபாடு ஏற்பட்டது என்பதை ஜெமீல் பின்வருமாறு கூறியுள்ளார்.
மிக நீண்ட காலமாக என்னிடம் ஒரு பழக்கம் இருந்து வருகின்றது. ஏதாவதொரு நூல் என் கை வசம் கிடைத்தவுடன் அதை வாசிப்பதற்கு முன்பாகவே விபரண அட்டையை (Bibliography Card) தயாரித்தலே அதுவாகும். காலக்கிரமத்தில் அவை நூற்றுக்கணக்கில் சேர்ந்துவிட்டன.
இந்த அட்டைகளை வைத்து தமது நூற்பட்டியல் சேகரிப்பை ஜெமீல் ஆரம்பித்துள்ளார். இதனைப்பற்றி எஸ்.எம். கமால்தீன் பின்வருமாறு கூறுகிறார்.
ஜனாப்.ஜெமீல் அவர்கள் செய்து வருவது போன்று தாம் படிக்கும் நூல்களுக்கான விவரண அட்டைகளைச் சேகரித்து வரும் ஒரு முஸ்லிமை இந்நாட்டில் நான் அறிந்த வகையில் இதுவரை கண்டதில்லை. (சுவடியாற்றுப்படை, பாகம் II,, 1995)
பதிவு பெறாத அடுத்த 15 ஆண்டுகாலத்துக்கான புதிய நூற்பட்டியல் தயாரிப்பை முடித்து அதனைச் செம்மைப் படுத்துவதில் ஈடுபட்டிருந்தபோதுதான் அவரது மரணம் நிகழ்ந்தது.அவரது மரணத்தின் பின்னர் அவரது படிப்பறையைப் பார்த்தபோது அச்சேற்றுவதற்குரிய விதத்தில் செம்மையாக அவரால் நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது மனைவி அதை வெளியட முயற்சிகள் நடப்பதாகவும் என்னிடம் கூறினார்.
இலங்கையில் முஸ்லிம் பண்பாடு தொடர்பாகவும் கலை மற்றும் பண்பாட்டு முதுசங்களை அறிமுகம் செய்யும் வகையிலும் வெளிவந்துள்ள நூல்களும் எழுத்தாக்கங்களும் மிகக்குறைவாகும். முஸ்லிம்களின் பாரம்பரியக் கலைகளையும் பண்பாட்டு முதுசங்களையும் பாதுகாக்கும் ஆர்வமும் அடுத்த தலைமுறையினருக்கு அவை கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற எண்ணமும் ஜெமீலுக்கு இருந்தது. இந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். பின்னர் அக்கட்டுரைகளை‘நமது முதுசம்’ என்ற நூலாக 2000 ம் ஆண்டில் வெளியிட்டார். 20 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் 7 கட்டுரைககள் பண்பாடு தொடர்பானவை. கிழக்கிலங்கையின் அழிந்து போன பல கலாசாரங்களையும,; மரபுகளையும் இந்நூலில் ஆசிரியர் பேசுகிறார்.
இலங்கைக் கலாசாரத்திணைக்களத்தின் முஸ்லிம் நுண் கலைப்பிரிவுத் தலைவராக அவர் பணியாற்றிய போது முஸ்லிம் கிராமியக் கலைகளையும் இசை மரபுகளையும் அறிமுகப்படுத்தும் பல நிகழ்ச்சிகளை கொழும்பிலும் தென்னிலங்கையிலும் கிழக்கு மாகாணத்திலும் அந்தப்பிரதேச மக்களின் ஆதரவுடன் அவர் நடத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் இளம் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கிழக்கு மாகாணத்திலும் வடமாகாணத்திலும்; மன்னாரிலும் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து விளங்கும் நாட்டார் பாடல்கள் பற்றியும் ஜெமீல் ஆய்வுகள் செய்துள்ளார். கற்ற சமூகத்தினருக்கு ஏற்றதாக இப்பாடல்கள் பற்றி எடுத்துக்கூறும் ஒரு சில ஆய்வாளர்களில் ஜெமீலும் ஒருவர் என்பது எனது எண்ணம்.
இந்தவகையில் ஜெமீலின் ‘கிராமத்து இதயம்: இலங்கை முஸ்லிம்களின் நாட்டுப்புற இயல்’ நூல் இலங்கை முஸ்லிம் நாட்டார் பாடல்கள் பற்றி குறிப்பிடத்தக்க ஆக்கமாகும். 1995ல் இந்நூல் வெளிவந்தது. 1980ல் மேற்கொண்ட கள ஆய்வுகளைப் பயன்படுத்தி ஜெமீல் கிராமத்து இதயம் நூலை எழுதியிருந்தமை இந்நூலுக்கான மற்றொரு சிறப்பம்சமாகும்.
தஞ்சாவூரில் 1995 ல் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜெமீல் அவர்கள் படித்த ‘நாட்டார் பாடல்களில் கலாசாரப் பாதிப்பு’ என்ற கட்டுரையும் 1996ல் திருச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய ஆய்வுக்கழக மாநாட்டில் சமர்ப்பித்த ‘நாட்டுப்புறப்பாடல்களில் அரபுத் தமிழ் சொல்வளம்’ என்ற கட்டுரையையும்குறிப்பிட்டுக் கூறமுடியும்.இவை இலங்கையில் நாட்டார் பாடல்களையும் நாட்டார் பாடல்களில் முஸ்லிம்களின் பங்களிப்பையும் முஸ்லிம் நாட்டார் பாடல்களின் சிறப்புகளையும் கூறும் நல்ல கட்டுரைகளாகும்.
இந்தக் கட்டுரைகளில் அவர் பயன்படுத்திய பாடல்கள் அவரது சொந்த கள ஆய்வுகளில் அவர் ஒலிப்பதிவு செய்து பெற்றுக் கொண்ட பாடல்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மற்றுமொரு அம்சமாகும். முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் எழுத்துருவில் பதியப்பட்டிருப்பதையும், பிரசுரிக்கப்பட்டுவருவதையும் நாம் அறிவோம். ஆனால், களத்திற்குச் சென்று கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்து அவற்றைப் பாடும் கிராம மக்களின் குரலில் நேரடியாக ஒலிப்பதிவு செய்யும் நிகழ்வுகள் இலங்கை முஸ்லிம் நாட்டார் பாடல் சேகரிப்பு வரலாற்றில் மிகக் குறைவாகவே நடந்துள்ளது. நாட்டார் பாடல் கவிவரிகள் மட்டுமல்ல அவை (இசை கலந்த) பாடல்கள். அந்த இசைகளையும் இராகங்களையும் பாதுகாப்பதற்கான நல்ல நடவடிக்கை இக்குரல் பதிவு முறையாகும்.
1980களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் அனுசரணையுடன் முஸ்லிம் நாட்டார் பாடல்கள் ஒலிப்பதிவினைப் பொறுப்பேற்று ஜெமீல் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அப்போதைய முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர்களான வீ.ஏ. கபூர், எம்.எச்.எம் குத்தூஸ் ஆகியோரும் இவ்வொலிப்பதிவு முயற்சிகளில்அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பலமகாணங்களில் அழிந்து கொண்டுவரும் இவ்வழகிய பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் சிறந்த முறை ஒன்றினை ஜெமீல் ஆரம்பித்திருப்பது பாராட்டிற்குரியதாகும். ஒலிநாடாக்கள் மற்றும் சுவடிகள் காப்பகத்துக்குரிய மேல்நாட்டு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி சில அரபு நாடுகள்மேலதிக ஆராயச்சிகளுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் அரபு நாட்டார் பாடல்களைப்பாதுகாத்துவருகின்றன. இதனால் செவிப்புலன் ஊடாக பாடல்களை அனுபவிக்கும் வாய்ப்பினை ஆய்வாளர் பெற்றுக் கொள்கின்றனர்.
அத்தோடு,1980 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து 1980 ம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி வரை 38 தொடர் நிகழ்ச்சிகளாக இந்நாட்டார் பாடல்கள் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் ஒலிபரப்பாகி உள்ளது. 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று நூற்றுக்கும் அதிகமானவர்களைச் சந்தித்து இப்பாடல் ஒலிப்பதிவை ஜெமீல் உருவாக்கி உள்ளார். நாட்டார் பாடல்களின் இராகத்தையும் இசைப்பண்புகளையும் பதிவு செய்த இலங்கை முஸ்லிம் ஒருவரின் முதல் நடவடிக்கையாக இதனைக் கருதுகிறேன். இலங்கை முஸ்லிம் வானொலிப் பிரிவினர் செய்த சில பயனுள்ள நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இது இன்னும் வானொலியினால் தொடரப்பட வேண்டிய முயற்சி என்பதையும் பல்கலைக்கழகங்கள் பொறுப்பேற்க வேண்டிய பண்பாட்டு நடவடிக்கை என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பின்னர் இது ஜெமீலின் தனிப்பட்ட முயற்சியில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணையில் இறுவெட்டாக வெளியிடப்பட்டது. ‘இலங்கை முஸ்லிம்களின் நாட்டுப்புறப் பாடல்கள்’ (Folk songs of the muslim of Srilanka) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த CD இல் மாப்பிள்ளை வாழ்த்து, காதல் பாடல், பொல்லடிப் பாடல், தலாட்டுப் பாடல் என 37 பாடல்கள் பதிவாகி உள்ளன. நமக்கு இன்று (CD) இல் கிடைக்கக் கூடிய உத்தியோகப் பூர்வமான நம்பத்தகுந்த ஒரு பதிவாக இது இருக்கக் கூடும்.
இந்தப் பின்னணியில் தான் அவரது ‘கிராமத்து இதயம்’ நாட்டார் பாடல்கள் நூல் 1995ல் வெளிவந்தது. அவர் 1980களில் தேடிச் சேகரித்த பெரும்பான்மையான பாடல்கள் எழுத்து வடிவில் இதில் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம் நாட்டார் பாடல்கள் பற்றிய கல்வியியல் ரீதியிலான அணுகுமுறையினையும் அத்தியாயக் கட்டமைப்பினையும் கொண்ட ஆய்வு நூலாக கிராமத்து இதயம் நூலைக் குறிப்பிடலாம்.
எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் முன்னின்று மேற்கொண்ட பணிகள் சேவைகள் நீண்ட பட்டியலுக்குரியவை. இவ்வளவு பொறுப்புக்களையும் முயற்சிகளையும் தனிநபர் ஒருவரால் சாதிப்பது கடினமானது. இந்தப்பின்னணியில் இருந்துதான் அவரது வாழ்நாள் முயற்சிகளை நாம் பார்க்கின்றோம் அது எமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றது. கல்வி, பண்பாடு, வரலாற்றுத் துறைகளில் நாம் மேலும் முன்னெடுக்க வேண்டிய, சாதிக்க வேண்டிய முயற்சிகளையும் அவரது கல்விப்புலமை எமக்கு ஆழமாக நினைவுபடுத்துகின்றது. ஜெமீல் பெற்றுள்ள வெற்றிகளில் இதுவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதையே இங்கு நான் உங்களோடு இன்று ஜெமீல் நினைவாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.