பிரதான எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவரும் நிலையில் மஹிந்த ஆதரவு அணியினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க முடியாது.
மஹிந்த அணியினருக்கு எதிர்த்தரப்பில் அமர மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். இந்த ஆட்சியில் நாட்டை முழுமையான அபிவிருத்தியின் பாதையில் கொண்டுசெல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருசிலர் தாம் இந்த கூட்டு அரசாங்கத்துடன் கைகோர்க்கத் தயாராக இல்லை என்பதை நேரடியாக வெளிப்படுத்தி தாம் அரசாங்க எதிர்ப்புக் குழுவினர் என தெரிவித்துள்ளனர்.
எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவர்களது விருப்பத்தை தடுக்காது அவர்கள் எதிரணியில் இருக்க அனுமதியையும் வழங்கியுள்ளார். எனினும் இவர்கள் தம்மை பிரதான எதிர்க்கட்சியாக தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி உள்ளது. இன்று நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. அவ்வாறு இருக்கையில் புதிதாக உருவானவர்கள் எவரையும் எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க முடியாது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்பாத காரணத்தினால் இந்த அணியினரை எதிர்க்கட்சி தரப்பில் அமர்வதற்கு ஆசன ஒதுக்கீடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் நாட்டை அபிவிருத்தியின் பாதையில் முன்னெடுத்து செல்லும் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யுத்தம் முடிவுக்கு வந்தபின் மிக வேகமாக நாட்டை அபிவிருத்தியின் பக்கம் மாற்றியுளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆசியாவில் விரைவில் அபிவிருத்தி கண்ட நாடுகளில் நாம் முன்னிலையில் உள்ளோம். அதேபோல் நாட்டில் 98 வீதமான மின்பாவனை பயன்படுத்தப்படுகின்றது. தற்போது உள்ள நிலையில் நாட்டில் 2 வீதமான மக்களே மின்பாவனை இன்றி வாழ்கின்றனர்.
அந்த குறைபாட்டையும் விரைவில் நிவர்த்திசெய்து நாட்டில் அனைத்து மக்களும் முழுமையான மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய கட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருகின்றோம். அடுத்த மூன்று மாதகாலத்தில் நாடுபூராகவும் மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதற்கான சர்வதேச உதவிகளையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.