உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எனினும் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட குழுவே இடம்பெறவேண்டும் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் வலியுறுத்தியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கம் எம்மை முன்கூட்டியே அறிவுறுத்துவது பயன்தருவதாக அமையும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான முழுமையான தரவுகள் எங்களுக்கு தரப்படுவதில்லை. நேரடியாகவே மத்திய அரசு பல திட்டங்களை செய்கின்றது எனவும் முதலமைச்சர் கூறினார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் பின்னர் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்இ சர்வதேச நாடுகள் உதவிகள்இ செயற்திட்டங்களை மேற்கொள்ளும்போது வடக்கு மாகாண அரசிற்கும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தரவுகளை வழக்குவது சிறந்த விடயமாகும். ஏனெனில் அத்திட்டங்களில் மக்களுக்கு எவை நன்மை பயக்கும் மற்றும் நீண்ட கால பலன் கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியும்.
ஆனால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான முழுமையான தரவுகள் எங்களுக்கு தரப்படுவதில்லை. நேரடியாகவே மத்திய அரசு பல திட்டங்களை செய்கின்றது. செய்தபின்னர் இதனைத் திறக்கிறோம்இ அதனைத் திறக்கிறோம் எனக் கூறி எம்மையும் அழைக்கிறார்கள். நாங்களும் சென்று அவற்றைத் திறக்கின்றோம்.
வடக்கிற்கு திட்டம் ஒன்றை மேற்கொள்ளும்போது எமக்கும் அது தொடர்பில் தெரியப்படுத்துவதினால் அதன் பலன்களை முழுமையாக மக்களுக்கு தெரிவிக்க முடியும் என ஜப்பான் நாட்டு பிரதிநிதியிடம் தெரிவித்தேன்.
மேலும் நல்லிணக்கம் என்பதை எம்முடன் கலந்து பேசாது வெளியிலிருந்து கொண்டுவந்து திணிக்கமுடியாது. எமக்குத் தேவையான விடயங்களில் நல்லிணக்கத்தைக் காட்டவேண்டும்.
குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இந்த அரசாங்கம் எவ்வளவு தூரம் இழுபறிப்படுகிறது என்பதைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னர் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களை அரசாங்கம் விடுவித்தபோது எவ்வித அசம்பாவிதங்களும் நாட்டில் நடைபெறவில்லை.
கடந்த காலத்தில் சிறைகளில் ஜே.வி.பி. கட்சி உறுப்பினர்கள் இருந்தபோது அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் பல தடங்கல்களையும் தாமதத்தையும் காட்டுவது வியப்பாக உள்ளது. இத்தகைய விடயங்களில் நல்லெண்ணத்தை காட்டினால் தான் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை விடுத்து நல்லிணக்கம் என்று கூறுவதால் நல்லிணக்கம் உருவாகாது.
மேலும் ஐ.நா.வினால் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளக விசாரணையில் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நான் கருதவில்லை. காரணம் எவ்வாறு இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
கடந்த காலங்களில் எத்தனையோ கலவரங்கள் ஏற்பட்டபோதும் பலர் தண்டிக்கப்படவில்லை. ஒருசிலர் தண்டிக்கப்பட்டாலும் மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தகைய நிலையில் உள்ளக விசாரணையில் யாரை நீதிபதியாக வைக்கப்போகின்றோம் என்பது மிக முக்கியமானது. வெளிநாட்டில் இருந்தே நீதிபதிகள் வரவழைக்கப்படவேண்டும். பக்கச் சார்பில்லாத நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டுவருவதன் மூலமே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு நீதியை பெற்றுக் கொள்ளாதவிடத்து மக்கள் மத்தியில் சுமுகமான சூழல் ஏற்படாததுடன் அவர்களின் மனதிலுள்ள ஏக்கம் அழிவடையாது என ஜப்பான் பிரதிநிதியிடம் தெரிவித்தேன்.
இதன்போது வடக்கு அரசும் மத்திய அரசும் பேசிக் கொள்வதன் மூலமே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளமுடியும் என்றும் உள்ளக விசாரணைக்கு தமிழ் நீதிபதிகள் இல்லையா என என்னிடம் ஜப்பான் நாட்டுப்பிரதிநிதி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த நான்இ தற்போது பிரதம நீதியரசராக உள்ளவரும் எனது மாணவர்தான். உச்ச நீதிபதியாகவும் ஒருவர் உள்ளார். இருந்தும் குறைந்த அளவில் தமிழ் நீதிபதிகள் இலங்கை நீதிமன்றில் இருக்கின்றார்கள். குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சரியான தீர்மானத்திற்கு வருவார்களா என்பது தெரியாது.
காரணம் அவர்களையும் பயம் பீடிக்கிறது. பின் விளைவுகள் ஏற்படும் என்பது சிறுபான்மை நீதிபதிகளின் கருத்தாக உள்ளது. இதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன் என்பதை ஜப்பான் பிரதிநிதியிடம் தெரிவித்தார்.
மேலும் ஜப்பான் நாட்டுப்பிரதிநிதி வடமாகாணத்தில் ஜெய்க்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் வடபகுதி நிலவரங்கள் தொடர்பாகவும் அறிந்து கொண்டார். மேலும் கிளிநொச்சியிலுள்ள விவசாய பீடத்திற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான உதவிகள் வழங்குவதில் தாம் நடவடிக்கை எடுப்பதுடன் கடற்தொழில் ஆராய்ச்சிக்கும் மற்றும் கிளிநொச்சியில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கான ஒழுங்கமைப்பை மேற்கொள்ள பரிசீலனை செய்வதாக குறிப்பிட்டார்.