இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் மகன் இளவரசர் அல்பிரட். இந்த அல்பிரட்டின் மகள் மேரி. மேரி, ருமேனியா நாட்டின் மன்னர் முதலாம் பெர்டினான்டை மணந்து கொண்டு அந்த நாட்டின் ராணி ஆனார். ராணி மேரி, 77 ஆண்டுகளுக்கு முன்னர் 1938-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது உடல் ஆர்கஸ் ஆற்றங்கரையில் உள்ள கர்ட்டி டி ஆர்கஸ் நகரில் உள்ள மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் ராணிக்கு இதயத்தை மட்டும் தனக்கு பிடித்தமான கோடைகால இல்லம் அமைந்துள்ள கருங்கடல் நகரமான பால்சிக்கில் ஒரு சிறிய ஆலயம் கட்டி அடக்கம் செய்ய வேண்டும் என்பது ஆசை. அது நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அந்த பகுதி பல்கேரியாவுக்கு 1940-ம் ஆண்டு திருப்பித்தரப்பட்டது. இதன் காரணமாக ராணியின் இதயத்தை அங்கிருந்து கார்பாத்தியன் மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரான் கேசில் என்ற கோட்டைக்கு தற்காலிகமாக எடுத்துச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கம்யூனிஸ்டு காலத்தில், இந்த பிரான் கேசில் கோட்டை அழிக்கப்பட்டது. இதனால் ராணியின் இதயம், தேசிய வரலாற்று அருங்காட்சியகத்துக்கு இடம் பெயர்ந்தது. 1971 இல் இருந்து அங்கு வைத்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்து, அரண்மனையுடன் தொடர்புடைய இடத்துக்கு ராணியின் இதயத்தை இடம் மாற்ற வேண்டும் என்று ராணியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.
அது ஏற்கப்பட்டு, ராணி மேரி மறைந்து 77 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதியாக அவரது இதயம், சிறிய வெள்ளி பெட்டியில் வைத்து, கார்பாத்தியன் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெலிசார் கேசில் நேற்று(4) நல்லடக்கம் செய்யப்பட்டது.