இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் : 700 விமானங்கள் ரத்து !

Indonesia-volcano-closes-airports

 இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலை, ரிஞ்ஜனி எரிமலை. இது அந்த நாட்டின் லாம்பாக் தீவில் உள்ளது. இந்த எரிமலையில் கடந்த வாரம் சீற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக எரிமலை உச்சியில் இருந்து பெருமளவு சாம்பல் வெளியேறி வருகிறது. இந்த சாம்பல், விமானங்களின் என்ஜின்களில் புகுந்தால் அவை செயல் இழந்து விடும் ஆபத்து இருக்கிறது.

இதன் காரணமாக பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இன்று வரை அது மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 700 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எரிமலை வெடிப்பு நிலவரத்தை ஆய்வு செய்துதான் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது பற்றியும், விமானங்களை இயக்குவது பற்றியும் முடிவு எடுப்போம் என விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

இதன் காரணமாக, பாலியில் கைது செய்யப்பட்டுள்ள நிழலுலக தாதா சோட்டாராஜன், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

இதேபோன்று அங்கு பயணம்மேற்கொண்டிருந்த துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, நேற்று மதியம் இந்திய நேரப்படி 12.15 மணிக்கு புரூனே செல்லவிருந்தார். பாலி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அவரது பயணமும் தாமதம் ஆகி உள்ளது.

இன்னொரு பக்கம் இந்தோனேசியாவில் நேற்று நில நடுக்கமும் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் கிழக்கு நுசாடெங்காரா மாகாணத்தில், ஆலோர் தீவு தொடரை மையமாக கொண்டு தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருப்பினும் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளுக்கு வந்தனர். சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை.