கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் பதவியேற்றுள்ளார்.
கனடா பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் விபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கனடாவில் வசிக்கும் 19 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஏனெனில் கடந்த தேர்தலில் 8 இந்தியர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் திருதியோ கனடாவின் 23-வது பிரதமராக நேற்று பதவியேற்று கொண்டார். அவருடன் அக்கட்சியை சேர்ந்த 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தோ கனடியரான ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்.
இந்தியாவில் பிறந்த சஜ்ஜன் 5 வயதாக இருக்கும் போது தனது குடும்பத்துடன் கனடா சென்று அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.