போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்க பத்திரிகையான ‘போர்ப்ஸ்’, உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இப்பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 14-வது இடத்தில் இருந்த அவர், தற்போது 6 இடங்கள் முன்னேறியுள்ளார்.
மோடி பற்றி அந்த பத்திரிகையில் குறிப்பிடுகையில், ‘மக்களின் மனம் கவர்ந்த பிரதமர் மோடி, தனது முதலாமாண்டு பதவிக்காலத்திலேயே 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளார். அமெரிக்க, சீன அதிபர்களுடனான சந்திப்பின்போது, உலக தலைவராக தன்னை உயர்த்திக்கொண்டார்.
இந்த பட்டியலில், ரஷிய அதிபர் புடின் முதலிடத்தில் உள்ளார். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் (2-வது இடம்), அமெரிக்க அதிபர் ஒபாமா (3-வது இடம்), போப் ஆண்டவர் (4-வது இடம்), சீன அதிபர் ஜி ஜின்பிங் (5-வது இடம்), பில்கேட்ஸ் (6-வது இடம்), இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் (8-வது இடம்) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மோடியை தவிர இந்தியா சார்பில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 36-வது இடத்தை பிடித்துள்ளார். தொழிலதிபர் லஷ்மி மிட்டல் 55-வது இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ நாதெல்லா 61-வது இடத்திலும் உள்ளனர்.