நில மசோதா, சரக்கு மற்றும் சேவை வரிகள் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, கடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
எனவே குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. பீகார் தேர்தல் முடிந்ததும், பாராளுமன்றம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நிகழ்வுகளே தற்போது மக்கள் மனதில் உள்ளது. இந்த தேர்தல் பணிகள் அனைத்தும் 8-ந்தேதி முடிவடைந்ததும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து எங்கள் எதிர்க்கட்சி தோழர்களுடன் பேசி முடிவு செய்வோம்.
கடந்த தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, நில மசோதா, ரியல் எஸ்டேட் ஒழுங்கு மசோதா உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் ஏதேதோ காரணங்களுக்காக நிறைவேற்ற முடியவில்லை. இவை முடங்கிக்கிடக்கின்றன.
தற்போது அனைத்து மக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்பார்த்து உள்ளனர். குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மீது அனைவரின் கவனமும் உள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டியதின் தேவைகள் குறித்து எதிர்க்கட்சிகளிடம் விளக்க மத்திய அரசு முயற்சிக்கும்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரிக்கு எதிராக கூறப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையென்றால், அது கண்டிக்கத்தக்கது. இதைப்போல ஷாருக்கானுக்கு எதிராக கூறப்பட்ட கருத்துகளையும் கட்சி அங்கீகரிக்கவில்லை. இது போன்று முட்டாள்தனமாக யாரும் பேசக்கூடாது.
சகிப்புத்தன்மை விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் நாம் நீண்ட விவாதத்தை மேற்கொள்ள முடியும். காங்கிரஸ் கட்சிக்கு எனது முதல் ஆலோசனை எதுவென்றால், பாராளுமன்றத்தை நடத்துவதில் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அரசின் சகிப்புத்தன்மையற்ற செயல் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் அரசு செயல்படுவதை, பாராளுமன்றம் செயல்படுவதை நீங்கள் தடுக்கிறீர்கள்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.