ஓசோன் படலத்தில் ஓட்டையிருப்பதைப் பற்றியும், அது குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் குளோரோஃப்ளோரோ காபன் போன்ற வேதிப்பொருளால் மேலும் பாதிக்கப்படுவதாகவும் வெகுகாலமாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி ஓசோன் படலத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டையின் அளவு மிக துல்லியமாக கணக்கிடப்பட்டது.
இதில், 2 கோடியே 82 லட்சம் சதுர கிலோமீட்டர் விட்டத்துக்கு இந்த ஓட்டை இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருந்தது. எனினும், ‘இதைக்கண்டு பயப்படத் தேவையில்லை’ என வளிமண்டல சுற்றுச்சூழல் தொடர்பாக ஆய்வு செய்துவரும் குழுவின் தலைமை அறிவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், இந்த ஓசோன் படலத்தின் இந்த ஓட்டைப் பிரச்சனை 21 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் முழுமையாகத் தீர்ந்துவிடும் எனத் தெரியவந்துள்ளது. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள் தொடர்பில் தெரியவந்த பின்னர், 1987 ஆம் ஆண்டில் இருந்து ஓசோன் படலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத முறையில் தற்கால குளிர்பதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே, குளிர்பதனப் பெட்டிகள் உற்பத்தியில் ஓசோன் மண்டலத்தில் ஓட்டையை ஏற்படுத்தும் மூலக்கூறுகளை தற்போது குறைத்துள்ளதால் இந்தப் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரியவந்துள்ளது. எனினும், அண்டார்ட்டிக்காவின் மீது உள்ள ஓசோன் படலம் முழுமையாக சீரடைய இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் எனவும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.