இலங்கை வீரர்களுக்கு, சீனப் படையினர், வரும் ஜூனில் நவீன போர்ப் பயிற்சி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர், ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு 2015’ என்பதாகும்.சீனா, தன் கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை, இலங்கையில் செயற்படுத்துவதற்கு, பெருமளவு நிதியை ஒதுக்கி, பல்வேறு நாடுகளையும் தன் பக்கம் திருப்பி வருகிறது.
இது வணிக நோக்கம் கொண்ட திட்டம் என்றே சீனா கூறினாலும், அதன் பின்னால் மிகப்பெரிய ராணுவ ஆதிக்க நோக்கமும் மறைந்துள்ளதாக, சர்வதேச உளவு அமைப்புகள் கருதுகின்றன.
மகிந்த ராஜபக் ஷே ஆட்சிக் காலத்தில், இலங்கையும், இந்த கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து கொள்ள ஒப்புதல் வழங்கியிருந்தது.
ஆனால், இலங்கையில் மைத்திரி பால சிறிசேன தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பின், பட்டுப்பாதைத் திட்டம் தொடர்பாக இலங்கையின் நிலை என்னவென்பது, இதுவரை தெளிவற்றதாகவே இருந்தது. அவர் சீனா சென்று வந்த பிறகு, நிலைமை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.இலங்கைப் படையினருடனான போர்ப் பயிற்சிக்கு, ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு 2015’ என்ற பெயரை சீனா சூட்டியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தன் பட்டுப்பாதை திட்டம், உலகளாவிய செழிப்பையும், வர்த்தக அபிவிருத்தியையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்று, சீனா கூறி வந்திருக்கிறது.குறிப்பாக, ‘இந்தத் திட்டத்தின் மூலம் ஆசிய நாடுகள் செழிப்படையும்’ என்று ஆசை காட்டி, அதன்மூலமே இந்தத் திட்டத்திற்குள் பல நாடுகளைக் கொண்டு வர முயற்சிக்கிறது.ஆனால், இத்திட்டத்தின் பின் உள்ள ராணுவ அதிகார நோக்கத்தை, பட்டுப்பாதை ஒத்துழைப்பு என்று பெயர் சூட்டியதன் மூலம், சீனா, சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது.
இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சீரான உறவைப் பேணவும், எந்தத் தரப்பையும் சாராமல் செயற்படவும் முயன்றுள்ள இலங்கை அரசுக்கு, சீனாவின் இந்தப் பெயர் சூட்டல், விருப்பத்துக்குரிய ஒரு விஷயமாக இருக்காது.சீனாவில் அரசியல், ராணுவம், பொருளாதாரம் மட்டுமன்றி, இலக்கியங்கள் கூட, கம்யூனிச சித்தாந்த இலக்கை நோக்கிக் குவிக்கப்பட்டவை. அந்த வகையில் தான், சாதாரண வணிகத் திட்டம் என்று வெளியே கூறிக் கொள்ளப்பட்ட பட்டுப்பாதைத் திட்டம், பின்னணியில், போர்ப் பயிற்சியுடன் துவங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சீன அதிபர் ஜி ஜின்பிங் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, பாதுகாப்புத் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி – தினமலர்