எஸ்.அஷ்ரப்கான்
இலங்கையில் நிலையான சமாதானம் இன்றைய சூழ்நிலையில் எட்டாக்கனியாக ஆகிவிடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. போருக்குப் பின்னரான இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது.
உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட்டதாக கருத முடியும். இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகம் ஏற்படாது என்பதற்கு யாரும் உத்தரவாதமளிக்க முடியாது.
முஸ்லிம் சமூகம் சார்பான தேவைகளை, உரிமைகளை முறையான விடயங்களை முன்வைத்து இலங்கைத் தேசியத்திற்கும்,சர்வதேசத்திற்கும் வலியுறுத்தும் போதிய அறிவோ அல்லது எண்ணமோ எந்தவொரு முஸ்லிம் கட்சிக் காரர்களுக்கும் தலைமைகளுக்கும் இல்லை என்ற நிலையே காணப்படுவது கவலை தருகிறது. முஸ்லிம் தரப்புகள் இன்னும் நேர்த்தியான சர்வதேச அரங்கில் சமர்பிக்கத் தராதரம் கொண்ட எத்தகைய ஆவணங்களை தயாரிக்கவோ, திரட்டிய தகவல்களை பாதுகாக்கவோ இல்லை.
தமிழர்கள் விடயத்தில் பாரிய அளவில் சர்வதேசம் தீர்வு விடயமாக பாரிய அழுத்தங்களை பிரயோகிப்பதால் சிபாரிசுகளை அமுல் நடத்துவதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம், மீள் கட்டமைப்பு, புனர்வாழ்வு, புனர் நிர்மாணம், இன நல்லிணக்கம்,காணிகளை மீட்டுக் கொடுத்தல், வீடுகளை கட்டிக் கொடுத்தல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி என பல்வேறு விடயங்களில் இலங்கை அரசாங்கம் கரிசனை காட்டி வருகிறது. இது காலத்தின் தேவை ஒன்றாக உணரப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் இன்று யுத்தம் ஒய்வு பெற்றிருக்கிறது. இன நல்லிணக்கத்திற்கான தேவை உணரப்படுகிறது. அவ்வாறான இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், நாட்டிலுள்ள யுத்தத்தின் வடுக்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும். அப்படியான வடுக்களில் ஒன்றுதான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரமுமாகும். எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.
குற்றவியல் சட்ட ஏற்பாடுகளின் கீழ் குற்றவாளிகள் என்று நிருபணமாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட தமிழ்க் கைதிகள் தவிர்த்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். முஸ்லிம் மக்களும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்திலேயே இருக்கின்றார்கள். இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென முஸ்லிம்கட்சிகள் மற்றும் முஸ்லிம் சமூகமும் நினைப்பது போன்றே முஸ்லிம்களுக்கும் யுத்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் விசாரணைக்கு உட்படுத்தி அவற்றிற்கும் நியாயங்களைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியை தமிழ் தரப்பினரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய காலத்தின் தேவை இருக்கின்றது. அப்போதுதான் இரு சிறுபான்மை சமூகங்களினதும் தொடர்ச்சியான உறவு வலுப்பெறும். இதற்காக தமிழ்க் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காகப் பேச முன்வர வேண்டும்.
இவ்வாறு முஸ்லிம்களினதும் ஆதங்கங்களை உள்வாங்கி அவர்களின் இழப்புக்களுக்கும் பொருத்தமான இழப்பீட்டு நிவாரணங்களை வழங்குவன் ஊடாகத்தான் உண்மையான இன நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியுமென்கின்ற யதார்த்தத்தினை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
வட கிழக்கு வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பாரிய உயிர் உடமை காணி இழப்புக்களை சந்தித்ததோடு ஒட்டு மொத்த வடபுல முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது வட கிழக்கு எங்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை குறிப்பிடும் எமது சாணக்கியமான அரசியல்வாதிகள் யாரும் வாய்ப்பேச்சுடன் விடயங்களை விட்டுச் செல்கின்றார்களே தவிர இவர்களால் முடிவொன்றினை பெறத்தக்க எந்த முயற்சியையும் தேசிய அரசியலில் காணமுடியாத துரப்பாக்கிய நிலை இருப்பது வேதனையான விடயம் ஒன்றாகும்.
மறிச்சிக்கட்டி வில்பத்து விவகாரம் கிழக்கில் புல்மோட்டை முதல் பொத்துவில், தீகவாபி வரை முஸ்லிம்களது காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. சர்வதேச தீர்மானங்களை வரவேற்று அறிக்கைகள் விட்ட பின்னர் வெறும் கையுடன் பேச்சுவார்த்தைகளில் காலத்தை கடத்தாது உரிய நிபுணர் குழுக்களை அமைத்து முஸ்லிம் விவகாரங்களை தரவுகளுடன் ஆவணப்படுத்தி முறையாக சர்வதேச மயப்படுத்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் இனியாவது முன்வர வேண்டும்.
முஸ்லிம் தலைமைகள் தமிழ் தரப்பினருடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் சார்பாக இன்று ஜெனீவாவில் பேசுவதற்கு நாதியற்ற நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் காவலர்களா ? இல்லை இவர்களால் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட நன்மைகள்தான் என்ன ? மறைந்த தலைவர் அஷ்ரபினால் காணப்பட்ட கனவினை எம்மவர்கள் குழி தோண்டி புதைப்பதோடு பாராளுமன்றத்தினாடாக தானும் தனது குடும்பமும் சுகபோகம் அனுபவிக்கின்ற சாணக்கியமே இவர்களிடம் தொடர்ந்தும் காணப்பட்டு வருகிறது.
எனவே முஸ்லிம் தலைமைகளால் எடுக்கப்படும் முஸ்லிம் சமூகம் சார்பான விடாப்பிடியான முயற்சிகளுக்கு மத்தியில்தான் எதிர்காலத்தின் சகோதர இனமான தமிழர்களும், தமிழ் தரப்பு தலைமைகளும் முஸ்லிம்களையும் உள்வாங்கிய பாரிய தீர்வுத் திட்ட யோசனைக்கான முயற்சிகளில் இறங்குவார்கள் என்பதை எம்மவர்கள் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.