கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி தொழில் உற்பத்திகளை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நாட்டு அரசாங்கம் 20 மில்லியன் டொலர் நிதியை கிழக்கு மாகாண சபைக்கு வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி தெரிவித்தார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும் இடையிலான சந்திப்பு, கல்லடியிலுள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர்:
‘கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்குகின்றது. இனியும் எதிர்காலத்திலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக அவுஸ்திரேலியா அரசாங்கம் உதவத் தயாராகவுள்ளது என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் முதலமைச்சரிடம் கேட்டறிந்துகொண்டதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.