விழுப்புரம் மாவட்டத்தில் 2–வது நாளாக நமக்குநாமே விடியல் பயணம் மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிடாகத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது கரும்பின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறிய விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை அரசே வழங்குவதோடு, பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகே சென்னை – திருச்சி 4 வழிச்சாலையில் சாலையோர விடுதியில் உள்ள அரங்கில் வியாபாரிகளை சந்தித்து ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினர்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
நமக்கு நாமே விடியல் பயணத்தை அ.தி.மு.க.,வினர் கொச்சைபடுத்தி விமர்சித்து வருகின்றனர். ஆனால், மக்களிடையே இது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தி.மு.க.,வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை சென்றப்பின் அந்த குழுவினருடன் கலந்து ஆலோசனை நடத்தி நமக்கு நாமே பயணத்தின் போது, பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ– மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கூறிய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை ஆய்வு செய்து திட்டங்களை தயார் செய்து தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர பேசினார்.
தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் பொன்முடி, மஸ்தான், அங்கையற்கன்னி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சம்பத், மணிக்கண்ணன், புஷ்பராஜ், திருநாவுக்கரசு, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், நகர செயலாளர் டேனியல்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேல், துரைராஜ், வைத்தியநாதன், முருகன், ராஜவேல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.