வடக்கிலிருந்து முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு தற்பொழுது அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு 07இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பதையும் அதனூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட பெரும்பாலும் ஆங்கிலத்தில் இந்த கருத்தரங்கை நடாத்துவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட உரிமைகளை அமைச்சர் சுட்டிகாட்டி உரையாற்றினார்.
வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக, முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப், தற்போதைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாராளுமன்றத்திலும், வெளியிலும் பலமாக குரல் கொடுத்ததாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அளுத்கம விவகாரம் போன்றவை பற்றியும் அமைச்சர் ஹக்கீம் குரலெழுப்பியதையும் அவர் நினைவூட்டினார்.
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக தாம் வெட்கித் தலைகுனிவதாக தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் தமது உரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே தமிழ் மக்களுக்கும் எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் செல்வகுமாரன் ஆகியோரும் பங்குபற்றி உரையாற்றினர். வளவாளர்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி, பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான மஸ்தான், டாக்டர் ஹபீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாவா பாறூக், எம்.எஸ்.எம்.அஸ்லம், ஹுனைஸ் பாறூக், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வடபுலத்திலிருந்து வந்திருந்த இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்குபற்றுகின்றனர்.