ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் மற்றும் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தையும் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்த்குஷ் பகுதியை மையமாக வைத்து காபுல் நகரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில், ஜார்ம் என்ற இடத்தின் அருகே பூமியின் 213.5 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது.
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் மற்றும் நாட்டின் பல முக்கிய நகரங்களில் நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில், 8 குழந்தைகள் உட்பட 152-க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானில் மட்டும் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 12 பள்ளி மாணவிகள் உட்பட 63-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ஜம்மு-காஷ்மீரில் இள்ள ஸ்ரீநகரில் இன்று பிற்பகல் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பாக டெல்லியின் பலபகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியின் உள் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வால் சில வினாடிகளுக்கு கட்டிடங்கள் குலுங்கின. இதனால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேபோல், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. காஷ்மீரில் பல வீடுகள் இடிந்துள்ளதாகவும், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலர் காயமுற்றுள்ளனர். இருப்பினும், இந்தியாவில் நிலநடுக்கத்திற்கு உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.