பாகிஸ்தான் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி : மோடி அறிவிப்பு !

0014b3dd-c1fc-43db-b7fc-0ffc4b4e2f91_S_secvpf

மாற்றுத்திறனாளியான இந்தியப்பெண் கீதாவை பராமரித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ‘எதி’ தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி கீதா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வழிதவறி சென்றுவிட்டார். அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கராச்சியில் உள்ள ‘எதி’ என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் இருந்து கீதா இந்தியாவுக்கு புறப்பட்டார். அவருடன் எதி தொண்டு அமைப்பின் நிறுவனர் பஹத் எதி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் விமானத்தில் வந்தனர். விமான நிலையத்தில் கீதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் வந்த ‘எதி’ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 பேரும் அரசு விருந்தினர்களாக கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இதுவரை கீதாவை பராமரித்து வந்த பாகிஸ்தானின் ‘எதி’ தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த மோடி, அவர்களின் கருணைக்கும் அன்புள்ளத்திற்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. அவர்களின் சேவை விலை மதிப்பற்றதெனினும் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்