-எம்.வை.அமீர்-
முஸ்லிம்கள் அனைவருக்கும் பாசக் கரம் நீட்டவே நினைக்கின்றனர். ஆனால், இன்று இலங்கையில் மாத்திரமல்ல எங்குமே முஸ்லிம்களை நோக்கி துவேசக் கரங்களே நீளுகின்றன. நீதி மறுக்கப்படுகிற ஒரு மக்கள் குழுமமாக முஸ்லிம்களை அந்நிய சமூகத்தினர் கருதுவது என் மனதில் வேதனையையும் வேடிக்கையையும் ஏற்படுத்துகிறது என்று இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மசூர் மௌலானா அவர்கள், குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்கள் பல விடயங்களில் நீதி மறுக்கப்பட்டு வாழ்கின்றனர். 1990 ஆம் ஆண்டு பாசிசப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களில் பலர் இன்னும் தங்கள் சொந்த நிலங்களுக்கு மீளக் குடியேற்றம் செய்யப்படாமல் சோகத்துடனும் தத்தளிப்புடனும் நாட்டின் பல பாகங்களில் தங்கள் சொந்த மண்ணை பார்க்கும் ஆவலுடன் காலத்தை கடத்தி வருகின்றனர்.
தமிழர்களின் ஏக போக ஆதரவு மிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்வதில் பல தடங்கல்களையும் -முட்டுக்கட்டைகளையும் போடுவது மனிதாபிமானமற்ற செயற்பாடுகளாகும். அண்மையில் இது தொடர்பாக கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியூதீன் அவர்கள் இது தொடர்பான தனது மன ஆதங்கத்தை பாராளுமன்றில் வெளிப்படுத்தி இருந்தார். இவ்விடயம் தொடர்பான ரிஷாத் அவர்களின் சமூகப் பற்றையும் நான் மனமுவந்து வரவேற்கிறேன்
எல்லோருக்கும் முஸ்லிம்கள் உதவி செய்கிறார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு உதவி செய்ய இங்கு யாருமில்லாத நிலையாக இருக்கிறது. அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மாத்திரமல்ல அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்ட வேண்டும். வட மாகாண முஸ்லிம்கள் தம் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறி மூன்று தசாப்தங்களை தொடுகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் இன்னல் மிக்க இடம்பெயர்வு வாழ்க்கை 30 வருடங்களை தாண்டுகிறது.
தனி நாடு கேட்டு புலிகள் நடாத்திய மோசமான யுத்தத்தில் முஸ்லிம்கள் இழந்தது மிக அதிகம் என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டும். போரின் போது வடக்கில் மாத்திரமல்ல கிழக்கில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மரணத்தை தழுவியதுடன் இன்னும் தங்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்களின் கோடிக் கணக்கான சொத்தழிப்புகள், ஊனமுற்ற சமூகம், உளவியல் ரீதியான தாக்கம், சமூகப் பிரச்சினைகள், அடிமட்டமான கல்வி நிலை, நிரந்தர வதிவிடமின்மை, சமூகச் சீரழிவுகள் என கோர யுத்தம் முஸ்லிம்களுக்கு பல தடயங்களை பரிசளித்து முஸ்லிம்களை நாதியற்ற ஒரு சமூகமாக மாற்றி இருப்பதை தம் இனத்திற்காக மாத்திரம் பரிந்து பேசுகிற ‘இனவாத மனிதாபிமானிகள்’ புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மேசைக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு தனித்தரப்பாகபேசப்பட வேண்டும். வட கிழக்கில் மாத்திரமல்ல நாட்டின் எல்லாப் பாகத்திலும் ’இரு தலைக் கொள்ளி எறும்புகளாக’ இரண்டு பேரின சமூகத்தினராலும் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற எந்தவொரு இனக் கலவரத்திலும் முஸ்லிம்களுக்குச் சார்பான நீதி வழங்கப்படவில்லை. இலங்கையின் நீதியும் முஸ்லிம்களை புறக்கணித்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்ப்பது மிகுந்த கவலைக்குரியதாகும்.
அன்று மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த ஹஜ்ஜாஜிகளை கோரமாக படு கொலை செய்த புலிகளை அல்லாஹ் இன்று கூண்டோடு அழித்தாலும் அதன் எச்ச சொச்சங்கள் இன்னும் இனவாதம் பேசி முஸ்லிம்களைவம்புக்கிழுப்பது ஆரோக்கியமான செயற்பாடல்ல. எல்லோருக்கும் பொதுவான நாட்டில் எல்லோரையும் போல சந்தோசமாக ஒற்றுமையாக வாழ்வதே இனவாதமற்ற இலங்கையர்களின் விருப்பமாகும்.
மாவனல்ல, தர்ஹா நகர், தம்புள்ளை பள்ளி, புத்தளம் என நாட்டின் பல பாகங்களில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட சூத்திரதாரிகள் இன்னும் சட்டத்தின் முன் சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களை கருவறுக்க நினைக்கும் இனவாதக் குற்றவாளிகளை பிடித்த நாளில் பிணை வழங்கி விடுவிக்கும் விநோதமான சட்டம் இலங்கையில் மாத்திரமே தாராளமாக பாவனையில் இருப்பது என்னை வியப்புக்குள்ளாக்குகிறது.
எனவே, இனியும் முஸ்லிம்கள் நீதி மறுக்கப்பட்ட ஒரு சமூகமாக இருக்க கூடாது. நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமம் எனும் அடிப்படையில் முஸ்லிம்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படுவதுடன், முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளைசர்வதேச மயப்படுத்தி அனைத்து மக்களையும் போல நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்க வேண்டுமென அரசியல் மற்றும் மனித உரிமைப் போராளிகளை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.