அஸாத் சாலிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

8-023_Fotor_Collage_Fotor
 
 அக்கரைப்பற்ரைச் சேர்ந்த சீனி முகமட் இத்ரீஸ் என்பவர் தனது முறைப்பாட்டை பதிவுத் தபாலில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பியுள்ளதுடன் குறிப்பிட்ட முறைப்பாட்டின் பிரதியை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் லத்தீப் இஸ்ஸடீன் என்பரிடம் நேரடியாக நேற்று (2015.10.23) கையளித்துள்ளார்.
தனது முறைப்பாட்டில்  குறிப்பிடுகையில்,
“அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்புவோம்” எனும் அமைப்பின் ஊடகவியலாளர் மகாநாட்டில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி ஊடகங்கள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும் தெரிவித்த கருத்தானது, அவர்களது மகத்தான சேவையையும் ஊடகத்தினது முக்கியத்துவத்தினையும் கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது. அத்துடன்
குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாண சபை உறுப்பினர் அரச அனுமதி பெற்ற  ‘மடவளை நியுஸ்’ எனும் இணைய செய்தி நிறுவனத்தினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். இக்கருத்தானது குறித்த ஊடகத்திற்கு எதிரானது மாத்திரமின்றி நாளாந்த செய்திகளை அறிவதற்காக பயன்படுத்தும் பல ஆயிரக்கணக்கானோரின் அடிப்படை உரிமையும் நாட்டின் ஊடக சுதந்திரத்தையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது.
எமது அரசியல் அமைப்பின் உறுப்புரை 14 இன் பிரகாரம்.
1.      கருத்து சுதந்திரம்
2.      பேச்சு சுதந்திரம்
3.      வெளியிடுவதற்கான சுதந்திரம் என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இருந்தும் மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலியின் செயற்பாடு எமது அடிப்படை உரிமைகளை நேரடியாக பாதித்துள்ளது அல்லது பாதிப்படைய இருக்கின்றது.
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அயராது செயற்பட்டு கொண்டிருக்கும் ஊடகநிறுவனத்திற்கு எதிரான செயற்பாடு எமது நாட்டுக்கு ஒன்றும் புதியதல்ல.
கடந்த ஆட்சிக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்  காயப்படுத்தப்பட்டும் உள்ளனர். அத்துடன் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் நேரடியாக அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதை தாங்கள் அறியாமல் இல்லை.
நல்லாட்சி எனக் கூறப்படும் கௌரவ ஜனாதிபதி மைத்தரி பால சிறிசேனா மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவர்கள் தலைமையில் ஆட்சியை உருவாக்குவதற்கு தானும் பங்களிப்பு செய்தவன் எனும் அடிப்படையிலும் இந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் காணப்படுகின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி போன்றவர்களின் செயற்பாட்டினால் இந்த நாட்டின் பிரஜைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டி ஏற்படுகின்றது.

உங்களிடம் வேண்டிக் கொள்வது யாதெனில்,
01.     குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலிக்கு எதிராக சட்ட  நடவடிக்கை எடுக்குமாறும்,
02.     குறிப்பிட்ட மாகாணசபை உறுப்பினரால் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள அல்லது ஏற்பட இருக்கின்ற அச்சுறுத்தல்களில் இருந்து சட்டப்பாதுகாப்பு வழங்குமாறும்,
03.     மனித உரிமைகள் ஆணைக்குழு கருதும் பிற நிவாரணங்களை வழங்குமாறும் ஆணைக்குழுவை மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன்.

006_Fotor
 
007_Fotor 008_Fotor