பி. முஹாஜிரீன்
இலங்கை பதிவாளர் சேவை தரம் – II மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் – II ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைகள் இம்மாதம் (ஓக்டோபர்) 31ம் திகதி நடைபெறவுள்ளதால் கிழக்கு மாகாண சபையினால் நடத்தப்படவுள்ள சமூக சேவை உத்தியோகத்தர் – தரம் ஐஐ பரீட்சையை பிற்போடுமாறு பரீட்சாத்திகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மத்திய அரசினால் பட்டதாரிகளுக்கென விண்ணப்பம் கோரப்பட்ட இலங்கை பதிவாளர் சேவை தரம் – II மற்றும் கிழக்கு மாகாண சபையினால் பட்டதாரிகளுக்கென விண்ணப்பம் கோரப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தர் – தரம் II ஆகிய போட்டிப் பரீட்சைகள் இம்மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளதாக விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பரீட்சாத்திகள் குழப்பமடைந்துள்ளனர்.
இவ் இரண்டு பரீட்சைகளுக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாலும் இவ்வாறு ஒரே நேரத்தில் பரீட்சைக்கு அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையினாலும் இவ்விரு பரீட்சைகளுக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பரீடசாத்திகள் தெரவிக்கின்றனர்.
மத்திய அரசினால் நடத்தப்படவுள்ள இலங்கை பதிவாளர் சேவை தரம் – II பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெறுவதால் நாடு முழுவதிலுமுள்ள பரீட்சாத்திகள் அனைவரும் இதில் தோற்றவுள்ளனர். இதனால் கிழக்கு மாகாண சபையினால் நடத்தப்படவுள்ள சமூகசேவை உத்தியோகத்தர் தரம் ஐஐ இற்கான பரீட்சையை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறு கடந்த காலங்களில் மத்திய அரசு மற்றும் மாகாண அரசு என்பவற்றினால் ஒரே நாளில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பப்ட்ட சந்தர்ப்பங்களில் மாகாண சபையினால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் விண்ணப்பதாரிகளின் நலன் கருதி பிற்போடப்பட்டுள்ளதை பரீட்சாத்திகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, கிழக்கு மாகாண சபை இவ்விடயத்தைக் கருத்திற் கொண்டு சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II இற்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சையை பிற்போடுமாறு பரீட்சாத்திகள் கேட்டுள்ளனர்.
மத்திய அரசின் பரீட்சை நேரசூசியை அறியாதவாறு கிழக்கு மாகாண சபையினால் பரீட்சை நேர அட்டவணை தயாரிப்பது நிறுத்தப்படுவதுடன் இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு மாகாண சபை பரீட்சைகள் பிரிவு கவனமெடுக்க வேண்டுமெனவும் கேட்கப்பட்டுள்ளது. இப்பரீட்சையை பிற்போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுதல் தொடர்பிலும் இரு பரீட்சைகளுக்கு ஒரே நேரத்தில் அழைப்பு விடுத்தமை தொடர்பிலும் பாதிக்கப்படவுள்ள பரீட்சாத்திகள் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் சம்;மந்தப்பட்ட அதிகாரிகளும் மாகாண அரசியல்வாதிகளும் உரிய கவனமெடுத்து இப்பரீட்சையை ஒத்திவைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கமாறு கேட்கப்பட்டுள்ளது.