பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் காலவதியான கடவுச்சீட்டு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு வெளிநாடு செல்ல சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
வெளிநாடு செல்வதற்காக நேற்றிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்ற விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு காலாவதியானதாக குற்ற புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அங்கு விரைந்த சி.ஐ.டி.யினர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வெளிநாடு செல்ல மறுப்புத் தெரிவித்து திருப்பியனுப்பினர்.
இந்நிலையில் மீண்டும் புதிய கடவுச்சீட்டை செய்துகொண்டு இன்று காலை விமான நிலையத்திற்கு சென்ற விமல் வீரவன்சவிடம் மீண்டும் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வெளிநாடு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த விடயத்தில் தலையிட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.