எவன்காட் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை : பிரதமர் !

Ranil1
எவன்காட் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும், சட்டமா அதிபரால் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு குறித்த பிரிவினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 23 (2)ன் கீழ் இன்று, அனுர குமார திஸாநாயக்கவால் அனுபப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது சர்வதேச கடல் பரப்பில் பயணித்த ஆயுதக் கப்பலை காலி துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதியளித்தது யார் என அனுர குமாரவால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 

இந்தக் கப்பல் சர்வதேச கடற்பரப்பில் பிரவேசிக்க பாதுகாப்பு அமைச்சரால் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் டீ.எம்.எஸ்.டீ.ஜயரத்னவின் இலக்கம் MOD/UD/CS/FA/1 மற்றும் 2012.09.18 திகதியில் அனுப்பப்பட்ட கடிதத்தில் எவன்காட் நிறுவனத்தின் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

எனினும் அந்தக் கப்பலை காலி துறைமுகத்தில் நிறுத்துவது குறித்து அனுமதி வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சிடம் ஆவணங்களில் இல்லை என பிரதமர் பதிலளித்துள்ளார். 

இது குறித்து இலங்கை பொலிஸாருக்கு அறியப்படுத்தப்பட்டதா என்ற வினாவுக்கு, 2015.01.18ம் திகதி பொலிஸாரால் குறித்த கப்பல் கைப்பற்றப்படும் வரை இலங்கை பொலிஸாருக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டதாக தகவல் இல்லை என அவர் கூறியுள்ளார். 

மேலும் குறித்த ஆயுதக் கப்பல் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வினவியபோது, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.