தேசிய ஷூரா சபையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு !

எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள விவாதத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் 20 ஆம் திகதி இரவு கொழும்பில் இடம் பெற்றது,  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டிய சில ஆவணங்களை தேசிய ஷூரா சபை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியது நிகழ்வில் மிகவும் ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் இடம் பெற்றன.

mp3_Fotor

இச்சந்திப்பின் போது நாட்டில் இடம்பெற்று வரும் சாதகமான அரசியல்  கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டு தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் மிகவும் சாணக்கியமாக முஸ்லிம்களது விவகாரங்களை உள்வாங்கச் செய்கின்ற அரசியல் சிவில் தலைமைகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது, குறிப்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும், எதிர்த் தரப்பு முஸ்லிம் உறுப்பினர்கள், அணிகள் மற்றும் அரசியல் தலைமைகளுடன் சுமுகமான உறவினை மேற்கொள்வதும், இனம் காணப்படுகின்ற முஸ்லிம் அரசியல் நிகழ்ச்சி நிரலை கூட்டுப் பொறுப்புடன் முதன்மைப் படுத்தி செயற்படுவதும் அவசியமென  அங்கு வலியுறுத்தப் பட்டது.

mp1_Fotor

அதேபோன்று தேசிய ஷூரா சபை மற்றும் முஸ்லிம் பாராளுமன்ர் உறுப்பினர்களுக்கிடையில் தொடர்ந்தேர்ச்சியாக நிபுணத்துவக் கலந்துரையாடல்கள் இடம் பெறல் வேண்டும் எனவும் இருதரப்பினரும் வலியுறுத்தினர்.

 

சர்வதேச சமூகத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகப் பொறிமுறை,  அமையவுள்ள உண்மை கண்டறியும் ஆணைக்குழு, சட்ட உதவி வழங்கும் ஆணையம், கருணை மன்று, அவற்றின் கீழ் வரும் சகல உப குழுக்களிலும்  உரிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுதல், ஆவணங்களை தரவுகளை,தகவல்களை திரட்டல் போன்ற முன் ஏற்பாடுகளை செய்தல் என போன்ற பல்வேறு அம்சங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.  

mp5_Fotor

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வட்டார மற்றும் விகிதாசார முறையில் இடம் பெறும்பட்சத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் தொடர்பிலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப் பட்டது.

 

கலந்துரையாடல்களில் அமைச்சர் ரிஷாத் பதயுதீன், பிரதி அமைச்சர் பைசல் காசிம், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம் நவவி , முஜீபுர்ரஹ்மான், அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எஸ்.எம் மரிக்கார், டாக்டர் ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இஷ்ஹாக் ரஹுமான் , காதர் மஸ்தான்  ஆகியோரும் தேசிய ஷூரா சபை சார்பாக தலைவர் தாரிக் மஹ்மூத், பிரதி தலைவர்களான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல், சட்டத்தரணி ரஷீத் இம்தியாஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான ஜாவீத் யூஸுப்,  ரிசா யஹ்யா, மௌலவி தஸ்லீம், மாஸ் யூஸுப், சகோ. எம். தஹாஸிம், அஷ்-ஷெய்க் எம். ரிழ்வான் பிரதி பொதுச் செயலாளர் மஸிஹுதீன் இனாமுல்லாஹ், பொருளாளர் அஷ்-ஷெய்க் ஸியாத்  ஆகியோரும் ஷுரா சபையின் செயலகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.