முதலமைச்சர் ஊடகப் பிரிவு
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதியொதுக்கீடு 04 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதியொதுக்கீடு 03 மில்லியன் ரூபாயாக இருந்தது. இந்த ஒதுக்கீட்டுத் தொகையை அதிகரிக்குமாறு மாகாணசபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், திருகோணமலையில் செவ்வாய்க்கிழமை (20) மாலை நடைபெற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியக் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டு, ஒரு மில்லியன் ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், கிழக்கு மாகாணசபையில் மொழி மாற்றுக் கருவி,தொடர்பாடல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்காக 07 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறிருக்க, சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 15 மில்லியன் ரூபாவை கிழக்கு மாகாணசபை ஒதுக்கீடு செய்யவும் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அவசரக் கட்டட நிர்மாண வேலைக்கு தேவையான நிதியை வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாணசபை அமைச்சரைப் பேச்சாளரும், முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.