இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி இல்லை !

இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்தார். கிரிக்கெட் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங் மனோகருடன் எந்த சந்திப்பும் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற இருந்தது. இந்த தொடருக்காக இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வந்த நிலையில் பஞ்சாபில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றதால் அந்த முயற்சி தடைபட்டது.

dhoni-misbah-file
இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இதன் காரணமாக, மும்பையில் பிசிசிஐ-பிசிபி நிர்வாகிகளிடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தானது. அதன்பின்னர் டெல்லியில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறிய பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர், பேச்சுவார்த்தை நடக்க வேண்டுமென்றால் மும்பையில் உள்ள தலைமையிடத்தில்தான் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், பி.சி.சி.ஐ. நிர்வாகியான ராஜீவ் சுக்லாவை ஷகாரியார் கான் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். ஆனால், அப்போது கிரிக்கெட் தொடர் குறித்து பேசவில்லை.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லாததால் நாடு திரும்புவதாக கூறிய ஷகாரியார் கான், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என்றும் தெரிவித்தார்.