அபு அலா
கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு இன்று காலை செவ்வாய்க்கிழமை (20) சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் ஆரம்பமானது.
இந்த சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண சபையின் சகல தரப்பினரது பங்கு பற்றுதலுடன் சென்ற கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் மாவட்டங்கள் தோறும் ”கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்” என்ற பெயரிலான கூட்டங்களை நடாத்தியதால் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும்,எதிர்காலத்தில் மாவட்ட ரீதியில் மேற்கொள்ளவேண்டிய அவசியமான அபிவிருத்தித் திட்டங்களை அடையாளங் காணக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும் புதிய முதலமைச்சர் பதவியேற்றதன் பின் இதுவரையும் இக்கூட்டங்கள் நடாத்தப்படாமல் இருப்பதனால் மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாவட்ட மட்டங்களில் நடைபெறும். அபிவிருத்தி தொடர்பான விபரங்களை அறியமுடியாத நிலை தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண சபை அமர்வுகளில் நமது மாகாண சபை உறுப்பினர்களே தெரிவித்துள்ளனர்.
எனவே “கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்” என்ற கூட்டத் தொடரை மீண்டும் அம்பாறை, திருமலை, மட்டுநகர் மாவட்டங்களில் ஒரு வருடத்துக்கு ஒரு தடவையாவது நடாத்துமாறும் 2015 ஆம் ஆண்டுக்கான கூட்டத்தினை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடாத்துமாறும் தனது தனிநபர் பிரேரணையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்றைய சபை அமர்வின்போது சமர்ப்பித்து உரையாற்றினார்.