எஸ்.அஷ்ரப்கான்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மூன்று வாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்திருப்பதை உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதியை அணுகாமல் தமது சொந்த அரசியல் லாபம் கருதி இப்பிரச்சினையை இழுத்தடித்துள்ளது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் என்பது நீண்ட கால பிரச்சினையாகும். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்று புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு என அறிவித்தவுடன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை கடந்த அரசு செய்யாமல் விட்டமை கவலைக்குரியது.
உண்மையில் அரசியல் கைதிகள் போன்ற விடயங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் மட்டுமே சாத்தியமாக முடியும் என்பதால் நிறைவேற்று அதிகார முறையை ரத்துச்செய்ய வேண்டாம் என்பதை உலமா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. கடந்த ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன இவ்வாறு தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளார். குற்றவாளி என தண்டனை பெற்றுக்கொண்டிருந்த சரத் பொன்சேக்காவை ஒரே இரவிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்தார். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் முயற்சிகளுக்கு துணை போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது இப்பிரச்சினையை நிறைவேற்று அதிகாரம் மூலம் உடனடியாக தீர்க்க சொல்வது ஆச்சர்யமாக உள்ளது. ஆனாலும் இதனை அவர்கள் சரியான முறையில் ஜனாதிபதியிடம் அணுகாது தமது சொந்த அரசியல் இலாபத்துக்காக ஏழை கைதிகளை பயன்படுத்துகிறார்கள்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர். இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நிறைவேற்று அதிகாரத்தை பயன் படுத்துவது என்பது அவரது கொள்கைக்கு மாற்றமானதாகவே உலகுகக்கு காட்டும் என்ற நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் இப்பிரச்சினையை ஒரே இரவில் முடிக்கும் அதிகாரம் தனது கையிலிருந்தும் அதனை பாவிக்காமல் மூன்று வாரங்களில் இதற்கு நல்லதொரு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை உண்மையில் பாராட்டுக்குரிய விடயமாகும். இதனை தமிழ் கூட்டமைப்பு ஏற்று ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பதன் மூலம் இது விடயத்தில் நல்ல முடிவுக்கு வழி வகுக்க முடியும்.