டாக்டர் பட்டத்துடன் நாடு திரும்பிய பிரணாப் முகர்ஜி !

ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரணாப் முகர்ஜி கவுரவ டாக்டர் பட்டத்துடன் இன்று இரவு இந்தியா திரும்பினார்.

முதல்கட்டமாக கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து ஜோர்டானுக்கு சென்ற பிரணாப் முகர்ஜி, தனது ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்து விட்டு, பாலஸ்தீனம் சென்றார். ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமானத்தில் சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்குச் சென்றார்.

231118-pranab-mukherjee

முன்னதாக ஜோர்டான் பல்கலைக்கழகத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கு சொந்தமானது, பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானது, அதேபோல் பாலஸ்தீனமும் அரேபியர்களுக்கே சொந்தம் என்று தெரிவித்தார். பாலஸ்தீனத்தில் அதன் அதிபர் அப்பாஸ், பிரதமர் ரமி ஹமாதுல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரணாப் சந்தித்துப் பேசினார்.

அங்குள்ள அல் குவாத் பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர் லால் நேரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் பாலஸ்தீன பயணத்தை முடித்துக் கொண்டு 3 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றார். 

பாலஸ்தீன பயணத்தை முடித்துக்கொண்டு, இஸ்ரேல் சென்றடைந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அங்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரணாப்  முகர்ஜி, அந்நாட்டு அதிபர் ரேவன் ரிவ்லின், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்தும், பயங்கரவாதம் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஹெப்ரு பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், தனது பயணத்தை நிறைவு செய்த பிரணாப், இன்றிரவு தலைநகர் டெல்லிக்கு திரும்பினார். பிரணாபின் பயணத்தை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.