குற்றச்சாட்டுக்கள் குறித்து மஹிந்த தரப்பு பதில்….!

பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டமை மூலம், அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முற்படுகின்றமை தௌிவாகியுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு செயலாளர் ரோஹான் வெலிவிடவின் கையெழுத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், 

அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழு முன் ஆஜரானார். இதன்பொருட்டு ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் ஐந்து காரணங்கள் கூறப்பட்டுள்ளன. 

முதலாவது காரணம் “வெற்றிடம் இல்லாத சந்தர்ப்பத்தில் அனுர சிறிவர்த்தன என்பவர் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனத்திற்கு தலைவர்/ பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டமை.” 

இந்த நியமனம் முறைப்படி மேற்கொள்ளப்பட்டது ஜனாதிபதியால் அல்ல சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான கருவூலச் செயலாளரினால் ஆகும். மேலும் குறித்த நியமனம் முன்னர் அந்தப் பதவியில் இருந்தவர் விலகிய பின்னரே வழங்கப்பட்டுள்ளது. 

ஆணைக்குழுவின் இரண்டாவது காரணம் “ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் மீடியா பெக்டரி நிறுவனத்தின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டமை தொடர்பில் பணம் வழங்காமையால் ஏற்பட்டதாக கூறப்படும் நிதி இழப்புகள்.” 

இந்த விடயம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தால் மீடியா பெக்டரி நிறுவனத்திற்கு 2015ம் ஆண்டு பெப்ரவரி அனுப்பப்பட்ட கடிதத்தின் படி முழு பணமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பெற்றுக் கொண்டதாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் கையெழுத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது. 

“தேர்தல் காலப்பகுதியில் ஸ்பெஷல் சோலுஷன் நிறுவனத்தில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக ஔிபரப்பட்ட விளம்பரங்களுக்கான 24 இலட்சம் ரூபாவை வழங்காமையால் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக, மூன்றாவது காரணமாக கூறப்பட்டுள்ளது.” 

குறித்த பணம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முற்றாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விளம்பரங்கள் பெருமளவு கிடைக்கும் போது அவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு அவற்றில் சிலவற்றை ஊடக நிறுவனங்கள் இலவசமாக ஔிபரப்பும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

“2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக பணம் பெற்றபோதும், அதனைக் காட்சிப்படுத்தாது விட்டமையால் 86 இலட்சம் ரூபாவை மீள வழங்க வேண்டி ஏற்பட்டமையால் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஸ்டம்” தொடர்பில் அடுத்த காரணமாக ஆணைக்குழு கூறியுள்ளது. 

இவை சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் உள்ளக நிர்வாக செயற்பாடுகள். 

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் விளம்பரங்களை ஔிபரப்ப இரட்டிப்பாக பணம் பெறப்பட்டதாகவும் ஒரே தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களில் ஒருவரிடம் அதிக தொகை அறிவிடப்பட்டதாகவும் ஆணைக்குழு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஐந்தாவது காரணமாகும். 

இது சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் உள்ளக நடவடிக்கை, என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் “எதுஎவ்வாறு இருப்பினும் எந்தவொரு ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அரசியல் கட்சியிலோ கூட்டமைப்பிலோ போட்டியிடும் ஒருவரை விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, குறித்த கட்சி அல்லது கூட்டமைப்பினால். இதன்படி இவை அனைத்தும் வேட்பாளர்களது அல்ல கட்சி அல்லது குறித்த கூட்டமைப்பின் பொறுப்பாகும். 

பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டமை மூலம், அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முற்படுகின்றமை தௌிவாகியுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.