ஜெனீவாவில் ஜெயிக்கத் துடிக்கும் முஸ்லிகள் பகுதி – 02 !

 

“அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தினை பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் தமிழீழத்தினை பெற்றுத் தருவேன்” என்று கூறிய மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபினை அழிக்க இந்த விடுதலைப் புலிகள் துடித்தனர்.புலிகளின் இயக்கத்தினை உயிரூட்டியத்தில் முஸ்லிம்களுக்கும் கணிசமான பங்குண்டு.இவ்வாறான முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகள் தங்கள் கோர முகத்தினையே காட்டினர்.வட கிழக்கில் பல இலட்சம் முஸ்லிம்,சிங்கள மக்கள் வாழ்கின்றனர்.புலிகளுக்கு தமிழீழத்தினை வழங்கினால் இவர்களின் நிலை என்ன? சிலர் கொல்லப்படுவதனூடாக தான் பல இலட்சம் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்றால் அவர்களினைக் கொல்லுவதில் தவறில்லை என்று தான் கூற வேண்டும்.மருந்து கசக்கின்றது என்பதற்காக அருந்தாமல் இருக்க முடியாது.

 

யுத்தம் ஓய்ந்த பிறகு தமிழ் மக்கள் மீது பேரினவாதத் தாக்குதல்கள் இலங்கையில் இடம்பெற்றதற்கான சான்றுகள் மிகக் குறைவு.தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களும் முன்னேற்றம் கண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.இலங்கையில் மீள் குடியேற்றமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இலங்கையின் கொடுங்கோல் ஆட்சி நிகழ்த்திய  மஹிந்த அரசும் வீழ்ச்சி கண்டுள்ளது.11000 விடுதலைப் புலிகள் புணர்வாழ்வளிக்கப்பட்டு இலங்கை அரசினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் நீதி கேட்டு அழுவது அவசியம் தானா?

 

13931211000309_PhotoI

இலங்கையில் யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைகள் நியாயமாக இடம்பெறும் பட்சத்தில் இராணுவத் தளபதிகள்,உயர்மட்ட அதிகாரிகள்,அரசியல் முக்கியஸ்தர்கள்  சர்வதேசத்தின் முன் கை கட்டும் நிலை ஏற்படலாம்.இச் செயல் பேரின மக்கள் ஒவ்வொருவரினையும் தமிழ் மக்கள் மீது ஆத்திரம் கொள்ளச் செய்யும்.அது வேறு பல விபரீத விளைவுகளினையும் ஏற்படுத்தலாம்.இது தமிழ் சிங்கள மக்களிடையே வரலாற்றுப் பகையாக உருவெடுக்கும்.சரியோ? பிழையோ? தமிழ் மக்கள் கல்வி,மருத்துவம் போன்ற பல தேவைகளுக்காக அதிகம் சிங்கள மக்கள் வாழக் கூடிய பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.இதன் போது தமிழ் மக்கள் பல துவேச விளைவுகளினை எதிர் நோக்க வேண்டி வரும்.சிறு சிறு விடயங்களுக்குத் தீர்வு கேட்டு ஐ.நா சபையிடம் செல்ல முடியாது.தமிழ் மக்களுக்கு தனி நாடான தமிழீழத்தினை பெற முடியுமாக இருந்தால் சிங்கள மக்களினை புறக்கணித்த தீர்வினை சிந்திக்கலாம்.சிங்கள மக்களிற்கு எதிரான தீர்வினைப் பெற்று எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து வாழ முடியுமா? யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையே மிகவும் சிரமமான ஒரு விடயமாகும்.ஏனைய விடயங்கள் கால ஓட்டத்தில் தமிழ் மக்களினால் பெற்றுக் கொள்ள முடியும்.

 

இலங்கைப் பிரச்சனை இவ்வாறு விஸ்வரூபம் எடுக்க த.தே.கூ,அமெரிக்கா ஆகியவற்றினை பிரதான காரணமாக குறிப்பிடலாம்.த.தே.கூவின் அரசியல் பலம்,எதற்கும் அடிபணியாத தன்மை,இலக்கினை நோக்கிய சிறப்பான காய் நகர்த்தல்கள் போன்றவற்றோடு அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான போக்கு சர்வதேச அளவில் இப் பிரச்சினையினை கொண்டு செல்ல வழி வகுத்தது.கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக பிரேரணையினைக் கொண்டு வந்து இலங்கையினை சிக்கல்களில் மாட்டி விடுவதில் அமெரிக்க அரசு அதிக முனைப்புக் காட்டியது.மஹிந்த அரசு அமெரிக்காவுடன் அவ்வளவு சிறந்த உறவினைப் பேணவில்லை.அமெரிக்க அரசுடன் உறவுகளினைப் பேணும் போது அது இலங்கையின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு அதீத பங்களிப்பைச் செய்யாது.யுத்தத்திற்கு பிறகு பொருளாதார ரீதியான உதவிகளே இலங்கைக்குத் தேவைப்பட்டது.இதற்கு ஜப்பான்,சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடன் உறவுகளினைப் பேணுவதே பொருத்தமானது.மஹிந்த அரசு சீனாவுடனேயே அதிகம் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் மஹிந்த அணியினை வெற்றி பெறச் செய்வதற்கு சீன அரசும்,மைத்திரி அணியினை வெற்றி பெறச் செய்வதற்கு அமெரிக்க அரசும் உதவியதாக கதைகள் கசிந்திருந்தன.அமெரிக்க அரசு தற்போதைய அரசிற்கு ஜெனீவாவில் நெகிழ்வுப் போக்கினை கடைப்பிடிகின்றது.இது அமெரிக்க அரசிற்கும்,தற்போதைய அரசிற்குமிடையில் ஒரு தொடர்பு உள்ளதனை எடுத்துக் காட்டுகிறது.இது வரை காலப்பகுதியில் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை வேண்டும் என்பதில் அமெரிக்க அரசு வீரியமாய் நின்றது.தற்போது தனது நிலைப்பாட்டிலிருந்து கீழ் இறங்கி உள்ளக விசாரணையே போதுமானதாகும் என்ற கருத்தினை எடுத்து வைத்துள்ளது.

 

அமெரிக்க அரசின் பரிந்துரையில் உள்ளக விசாரணையினை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.தீர்வினை சர்வதேசத்தின் உதவியுடன் பெற வேண்டும் எனக் கூறி உள்ளது.தீர்வுக்காக இலங்கை அரசு தனக்கு விரும்பிய நாட்டினை தெரிவு செய்து கொள்ளலாம் என்ற சலுகையினையும் வழங்கியுள்ளது.இவ் அரசின் மீது அமெரிக்காவிற்கு இத்தனை நம்பிக்கை வர,இவ் அரசு என்னதான் செய்துள்ளது? கள்ளனிடம்நீ  திருடினியா? எனக் கேட்டால் எந்தக் கள்ளனாவது “ஆம் என பதில் அளிப்பானா?”

 

அமெரிக்க அரசு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை தனது நெகிழ்வுத் தன்மைக்கான பிரதான காரணமாக குறிப்பிடுகிறது.இவ் ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கான தீர்வு கிடைத்து விடுமா? என்பதே இங்குள்ள வினாவாகும்.இவ் ஆட்சி மாற்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர்,பிரதம நீதி அரசர்,வட மாகாண ஆளுநர்,மத்திய வங்கி ஆளுநர் போன்ற மிகப் பெரிய பதவிகளினை தமிழர்களிற்கு வழங்கியுள்ளது.பதவிகள் என்னவோ? தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டாலும்,ஜனாதிபதி நினைத்திருந்தால் வழங்காமலும் விட்டிருக்கலாம்.முன்னைய அரசுகள் ஆட்சி செய்த போது தகுதியுடைய எத்தனையோ நபர்கள் இருந்தனர்.இருந்த போதிலும் தமிழர்கள் யாருமே நியமிக்கப்படவில்லை.

 

எதிர்க் கட்சித் தலைவர்ப் பதவிக்கு அனைவரும் த.தே.கூ வின் தலைவர் சம்பந்தனை தகுதியானவராக குறிப்பிடுகின்றனர்.எதிர்க் கட்சித் தலைவர்ப் பதவி என்பது தேசிய ரீதியான பதவிகளில் ஒன்று.இவ் எதிர்க் கட்சி பதவியில் இருப்பவர் தேசிய ரீதியில் மக்கள் தேவைகளினை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.சம்பந்தனைப் பொறுத்த மட்டில் வட,கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் ஆதரவினை மாத்திரம் பெற்றவர்.இவரின் சிந்தனைகள் தமிழர்களினை மையப்படுத்தி மாத்திரமே உள்ளது என்பதனையும் யாவரும் ஏற்பர்.இவர் தேசிய ரீதியிலான தமிழர்களின் ஆதரவினைக் கூட பெற்றவர் அல்ல.இப்படியானவர் பொருத்தமானவரா ?

 

தற்போது எதிர்க் கட்சியில் அமர்ந்துள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் பெற்ற ஆசன அடிப்படையில் நோக்கும் போது,த.தே.கூவிற்கே எதிர்க் கட்சித் தலைவர்ப் பதவி செல்ல வேண்டும்.இருப்பினும்,எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ள கட்சிகளில் அதிக ஆசனம் உள்ள கட்சிக்கு எதிர்க் கட்சித் தலைவர்ப் பதவியினை வழங்குவது எழுத்து ரூப சட்டம் அல்ல.மரபு ரீதியான சட்டமே! மேலும்,அதிக ஆசனங்களினை பெற்ற பேரின கட்சிகள் எதிர்க் கட்சித் தலைவர் விடயத்தில் புறக்கணிக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.பேரின சிந்தனைகள் இவ் அரசினை வழி நடாத்தி இருந்தால்,இவ் எதிர்க் கட்சி பதவியினை வழங்காதும் விட்டிருக்கலாம்.

 

அதே போன்றே,ஆளுனர்ப் பதவி என்பது மிகவும் முக்கியமான பதவிகளில் ஒன்றாகும்.13ம் சீர் திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான காணி,பாதுகாப்பு அதிகாரங்களினை வழங்குவதற்கு மத்திய அரசு தயங்குகிறது.அதாவது நிறைவேற்றப்பட்டதை சட்டத்தினை அமுல் படுத்தவில்லை.இவ் விடயத்திற்கு எதிர் மறையாக 13ம் சீர் திருத்தத்தில் உள்ள  அரசுக்கு சார்பான ஒரு விடயம் தான் ஆளுநர்ப் பதவியாகும்.ஆளுனர்ப் பதவி என்பது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு பதவி.இப் பதவியானது மாகாண சபையின் விடயங்களில் தலையிடக் கூடிய அதிகாரமிக்க பதவியாகும்.தனது அதிகாரத்திலிருந்து விடுபடும் மாகாண சபையினை கட்டுப் படுத்த இப் பதவியினை அரசு பயன்படுத்தலாம்.இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பதவியினை தமிழரினைக் கொண்டு இலங்கை அரசு அலங்கரித்திருப்பது தமிழருக்கான தீர்வினைப் பெறலாம் என்பதற்கான ஒரு சிறு சைகையாக எடுத்துக் கொள்ளலாம்.முழுமையாக இவ் அரசினை நம்புவதற்கு இவ் அரசின் மேலுள்ள செயற்பாடுகளினை மாத்திரம் வைத்துக் கொண்டு கூற முடியாது.

 

தமிழ் மக்கள் இலங்கை அரசுடன் உடன் பாட்டு அடிப்படையில் தீர்வினைப் பெறாமல் சர்வதேசத்தினை நாடுவதில் சில நியாய பூர்வமான காரணங்களும் உள்ளன.பண்டா செல்வா ஒப்பந்தம்,டட்லி செல்வா ஒப்பந்தங்கள் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செய்யப்பட்ட போதும் பேரின அழுத்தங்களின் முன் அதனை நிறைவேற்ற இயலாமல் போனது.13ம் சீர் திருத்ததத்தினை இந்திய அரசு இலங்கை அரசின் மீது திணித்த போதும் அதனைக் கூட இலங்கை அரசு முழுமையாக நடை முறைப்படுத்தவில்லை.

 

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்தவினை இவ் விடயத்தில் பாதுகாப்பதாக தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளார்.தற்போதைய ஜனாதிபதியும் யுத்த காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய பதவிகளினை வகித்தவர்.யுத்த காலத்தில் மஹிந்த ராஜ பக்ஸவிற்கு பக்க பலமாக தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான ஒரு அணி ஐ.தே.கவில் இருந்து வெளியேறி ஆதரித்திருந்தது.தற்போதைய அரசில் முக்கிய வகிபாகம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கூட யுத்த காலத்தில் மஹிந்த ராஜ பக்ஸவுடன் ஒட்டி உறவாடியவர்கள்.தற்போதைய தேசிய அரசிற்கு மிகவும் சவாலாக காணப்படும் ஜே.வி.பி யுத்தத்தினை ஆதரவித்தவர்கள்.இன்றுள்ள சிங்கள மக்கள் மஹிந்தவின்  ஊழல்கள் மலிந்து கிடக்கின்ற போதும் அவரினை ஆதரிப்பதற்கான காரணம் இந்த யுத்தத்தினை ஒழித்தமைக்கே! இவ்வாறானவற்றினை வைத்து நன்கு ஆராயும் போது,தமிழ் மக்களிற்கான தீர்வுகளை உடன்பாட்டு அடிப்படையில் தற்போதைய அரசில் பெறுவதென்பது சாத்தியமானதா? என்பது கேள்விக் குறியே!

 

தற்போது அமேரிக்கா தமிழர்களின் விடயத்தில் தனது கழுத்தினை உள்ளுக்கு இழுத்துள்ளது.அமெரிக்காவின் உதவியே தமிழர்களின் போராட்டத்திற்கு மிகவும் வலுச் சேர்த்திருந்தது.இலங்கை தொடர்பான பிரேரணைகள் முன் வைக்கப்படும் போது இலங்கைக்கு சார்பான அணி,எதிரான அணி என்று செயற்படுவதனை விட அமெரிக்காவிற்கு சார்பான அணி,எதிரான அணி என்றே செயற்படும்.இனி தமிழ் மக்களிற்கான தீர்வுகள் எட்டாக் கனி என்று கூறினாலும் தவறில்லை.இந்த விடயத்தினை இனியும் தூக்கிப் பிடிப்பதென்றால் இந்தியா தூக்கிப் பிடிக்க வேண்டும்.சீனா,இந்தியா ஆகியவற்றிடையே நிலவும் வர்த்தக,அதிகாரப் போட்டிக்கு மத்தியில் இலங்கையினை எதிர்த்து இந்தியாவினால் செயற்படாது.இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் மிகவும் கடினப் போக்கினை கடைப்பிடித்த இந்திய அரசு தனது அதிகாரத்தினை ஆசியாவில் தக்க நோக்கில் 1964ம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் சில நெகிழ்வுத் தன்மையினை கடைப்பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.