இலங்கையில் நிலத்திலும் கடலிலும் உள்ள கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
யுத்தத்தின் எச்சங்களாக காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் இலங்கையர்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்வதற்கு அமெரிக்கா உதவுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.
இலங்கையின் நீருக்குள்ளே கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைக்கு உபகரண வசதி மற்றும் ஆதரவு வழங்கும் இரண்டு வார பயிற்சி அமர்வொன்றை அமெரிக்க கடற்படை குழுவொன்று திருகோணமலையில் நிறைவுசெய்துள்ளது.
நீருக்குள் மூழ்கியப் பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டறியும் சோனர் கருவி மற்றும் ரோபோக்களும் இலங்கை கடற்படையினருக்கு இதன்போது நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நீருக்குள்ளே காணப்படும் எந்தவொரு பொருள் தொடர்பிலும் ஆராய்வதற்கும் கண்டறிவதற்கும் இலங்கை கடற்படையினரின் ஆற்றல் விரிவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்பரப்பில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் திருகோணமலை துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகளையும் விஸ்தரிக்க முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.