துருக்கி தலைநகர் அங்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியில் ஆட்சியாளர்களுக்கும் குர்திஷ் படையினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று காலை தலைநகர் அங்காராவில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி அங்காராவின் பிரதான ரெயில் நிலையத்தை நெருங்கியபோது கூட்டத்தின் மத்தியில் பயங்கர குண்டு வெடித்தது.
இதில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமாகினர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். குண்டு வெடித்ததும் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது மற்றொரு குண்டு வெடித்தது.
இந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 30 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. 186 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள அதிபர் எர்டோகன், நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் குலைக்க தீவிரவாதிகள் குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். மேலும், மரணமடைந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் நவம்பர் 1-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.