முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட தந்திரோபாயத்தையே மைத்ரியும், ரணிலும் பின்பற்றுகின்றார்களா?

 

இது சித்தீக் காரியப்பரின் இன்றைய கட்டுரைக்கு பதில் கட்டுரையாகும்.

சிறுபான்மை சமூகங்களில் இருக்கும் தங்களுக்கு சாதகமான முகவர்களைக்கொண்டு அம்மக்களின் குரல்களை சிதறவைப்பதும், அச்சமூகத்தை அரசியல் அனாதைகளாக்கி அதில் குளிர்காய பேரினவாத அரசுகள் முற்படுவதும் ஒன்றும் புதிய விடயமல்ல. 

தேர்தலின்போது சிறுபான்மை இனத்தின் ஏக பிரதிநித்துவ கட்சியின் தயவுடன் ஆட்சியில் அமரும் நோக்கோடு தங்களது தேவைக்கு பயன்படுத்திவிட்டு, தேவை முடிந்தவுடன் கருவேப்பிலை போன்று தூக்கி எறிவது பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலாகும். இது இன்று மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை திரைமறைவில் நடைபெற்று வருகின்ற ஓர் சதியாகும். 

இன்றய முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற சிங்கள பேரினவாதிகளின் பிரதான முகவர்களான ரிசாத் பதியுதீன், அதாஉல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களைக்கொண்டு எங்கெல்லாம் முஸ்லிம் காங்கிரசுக்கு மக்களின் செல்வாக்குகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் இம்முகவர்கள் ஊடாக முஸ்லிம் காங்கிரசை அழிப்பதெற்கு கடந்த ஆட்சியில் மகிந்தராஜபக்சவின் அனைத்து இயந்திரங்களும் முயற்சித்து இறுதியில் தோல்வி கண்டது.

பொதுபலசேனாவை தடைசெய்யவில்லை என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் மஹிந்த அரசு பின்னணியில் உள்ளது என்ற காரணங்களுக்காக்கவுமே மஹிந்தராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் செயட்பட்டதே தவிர, மைத்ரிபால சிரிசேனாவும், ரணில் விக்ரமசிங்கவும் புண்ணியவான்கள் என்பதற்காக அல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

2002 தொடக்கம்  2004 ஆம் ஆண்டு வரையிலான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின்போது முஸ்லிம் காங்கிரசை தன்னுடன் வைத்துக்கொண்டு அதனுள் பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை சின்னாபின்னப்படுத்த பெரும் பிரயத்தங்ககளை மேற்கொண்டார். அதன் விளைவாகவே அதாஉல்லாஹ் தலைமையில் மு.கா. தலைமைத்துவத்தை கைப்பேற்ற முயற்சித்து, இறுதியில் தோல்வியுடன் கட்சியை விட்டு வெளியேறினர்.

விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை செய்துவிட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உலகுக்கு காண்பித்துக்கொண்டு, ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எதனையும் அமுல்படுத்தாமல், புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்துவதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தினார் ரணில் விக்ரமசிங்க. அதன் விளைவாகவே புலிகளின் கிழக்குமாகான தளபதி கருணா அம்மானும், அவருடன் சேர்த்து ஆறாயிரம் போராளிகளும் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டனர். இதில் எமது சமூகத்துக்கும்  படிப்பினைகள் இருக்கின்றது.

பச்சையோ, நீலமோ எந்த பேரினவாத தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை இனம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களின் கொள்கைகள் ஒன்றுதான். சிறுபான்மை இனத்தின் பேரம்பேசும் சக்தியை அச்சமூகத்தில் உள்ள தங்களது முகவர்களைக்கொண்டு அழிப்பதற்காக இவர்கள் பயன்படுத்தும் சாதனம் அபிவிருத்தியும், தொழில்வாய்ப்புமாகும். 

கடந்த ஆட்சியில் முஸ்லிம் காங்கிரசை சிதைப்பதற்காக அபிவிருத்தி என்ற போர்வையில் ரிசாத் பதியுதீன், அதாஉல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களைக்கொண்டு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஏராளமான பணத்தினை முஸ்லிம் பிரதேசங்களுக்கு வாரி வழங்கியும், முஸ்லிம் காங்கிரசை அழிக்க முடியவில்லை. இதுபோன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிப்பதற்காக டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்கள் ஊடாக தமிழ் பிரதேசங்களுக்கு பணம்  வாரியிறைக்கப்பட்டது. இறுதியில் மகிந்த ராஜபக்சவே அழிந்தார் என்பது ஒன்றும் ரகசியமல்ல. 

இன்று பேரினவாதிகளின் முகவர்களில் அதாஉல்லாவும், ஹிஸ்புல்லாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டும் முஸ்லிம் காங்கிரசை அழித்து நீலக்கட்சியை கிழக்கில் உயிர்ப்பிக்கும் நோக்குடன் ஹிஸ்புல்லாஹ் என்ற சிங்களத்தின் முகவருக்கு மைத்ரிபால சிரிசேனாவினால் அரசியல் மூச்சுக்காற்று வழங்கப்பட்டுள்ளது. அது இன்னும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அதேபோல அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க தனது முகவராக ரிசாத் பதியுதீனை பலப்படுத்த உள்ளதாகவும் இதற்காக கடந்த தேர்தலில் மயில் கட்சிக்கு கிடைத்த 33000 வாக்குகள் மூலம் பேரினவாதிகளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த பொது தேர்தலில் மயிலுக்கு அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த வாக்குகள் உண்மையில் மயிலுக்குரியதா என்று ஒவ்வொருவரும் தங்களது மனச்சாட்சியைக்கொண்டு சிந்திக்க வேண்டும். இது நிலையான வாகுகள் அல்ல. கடந்த ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு வாக்குகளே முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தில் அளிக்கப்பட்டது.

அத்துடன் முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயிலின் தனிப்பட்ட வாக்குகளே அதுவாகும். அவர் உபவேந்தராக இருந்த காலத்தில் தனது பதவியைக்கொண்டு முடியுமான சில வேலைகளை செய்ததன்காரனமாகவே குறித்த வாக்கு வங்கிகள் அவருக்கு கிடைத்தது. 

கலாநிதி இஸ்மாயில் அவர்கள் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடுவதற்கு முயற்சித்தபோது அவருக்கு கால்சீட் கிடைக்காததினாலேயே வேறு வழியின்றி மயில் கட்சியில் போட்டியிட்டார். மாறாக அவர் மயில் கட்சியின் ஆரம்ப உறுப்பினரோ, ஆதரவாளரோ அல்ல. 

ஆனால் முஸ்லிம் காங்கிரசில் யாருக்கும் தனிப்பட்ட பெருவாரியான வாக்குகள் கிடையாது அது கட்சிக்குரிய வாக்குகளாகும். கட்சியை விட்டு செல்கின்றவர்கள் செல்லாகாசாகிவிடுவர். இம்முறை கலாநிதி இஸ்மாயிலுக்கு கிடைத்த வாக்குகளை எந்தளவுக்கு தக்கவைத்துக் கொள்வார் என்பதற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை. 

எது எப்படி இருப்பினும் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முஸ்லிம் காங்கிரஸ் மீது குறிவைத்து  ஹிஸ்புல்லாஹ், ரிசாத் பதியுதீன் ஆகிய முகவர்கள் ஊடாக பல அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.  முஸ்லிம் மக்களாகிய நாங்கள் இதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரசை அழிக்க முற்பட்டவர்கள் இறுதியில் அவர்களே அழிந்தார்கள் என்ற யதார்த்தத்தை இவர்களுக்கும் புரியவைக்க வேண்டும்.     

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது