இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
சீன உதவி வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது.
இதன்போது, இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சீனாவுக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின்போது சீன ஜனாதிபதியும்
அரசாங்கமும் தனக்கு வழங்கிய முழுமையான ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி திருப்தி வெளியிட்டார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளை ஜனாதிபதி பாராட்டினார்.
இலங்கையை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் பணிகள் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையை தென்னாசியாவில் ஒரு முக்கிய நாடாக சீனா பார்க்கின்றது எனக்குறிப்பிட்ட சீன உதவி வெளிவிவகார அமைச்சர் லீ யூ சென்மின், இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீனா வழங்கும் என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலப்பகுதியிலிருந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசியல் தலைமைத்துவத்தை லீ யூ சென்மின் பாராட்டினார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளுக்காக ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான வைத்தியசாலை குறித்து ஜனாதிபதி சீன வெளிவகார அமைச்சருக்கு நினைவூட்டியதோடு, சீன அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று அதற்கான சாத்தியமான வள ஆய்வைச் செய்து வருவதாகவும் அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் சென்மிங் குறிப்பிட்டார்.
சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிகாட்டினார்.
இரண்டு நாடுகளுக்கிடையேயும் இளம் அரசியல்வாதிகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.