மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரை புகையிரதப்பாதை அமைக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை!

 

 

-எம்.வை.அமீர் –

 

மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையிலான புகையிரதப்பாதை அமைக்க மேன்மைதாங்கிய ஜனாதிபதி அவர்களைக் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றை கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீட் இன்று முன்மொழிந்தார்.

1-3_Fotor

 

 

கல்முனை மாநகரசபையின் இம்மாதத்துக்கான அமர்வு 2015-10-07 அன்று மாநகர முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற போதே குறித்த பிரேரணையை முன்மொழிந்தார்.

2-2_Fotor 

பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றிய பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீட், மட்டக்களப்பு – பொத்துவில் வரையிலான புகையிரதப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்றல்ல இற்றைக்கு 30 வருடங்களுக்கு  மேலாக இப்பிரதேச புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், சமூக நல இயக்கங்களும் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

 

 இக்கோரிக்கைக்கு வலுவூட்டும் வகையில் 1992ம் ஆண்டு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் வர்த்தக வானிபத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர்.மன்சூர் அவரது தலைமையில் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகியோரை கொண்ட தூதுக்குழுவொன்று ஈரான்  இஸ்லாமியக் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. அவ்விஜயத்தின் போது மட்டக்களப்பு – பொத்துவில் வரையிலான புகையிரதப்பாதையொன்​றை அமைத்துதருமாறு கோரிக்கைவிடுத்திருந்தது.

 

அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய்வதற்காக 1993ம் ஆண்டு ஈரான் அரசின் பொறியியல் நிபுணர்கள் குழு இலங்கை வந்து ஆய்வுகளை மேற்கொண்டது.

 

 பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் வடகிழக்கில் தோன்றிய அசாதாரண சூழ்நிலைகளும் புகையிரத பாதை அமைப்பதில் தடைகளை ஏற்படுத்தியது.

 

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நீண்டதூர சேவை மட்டக்களப்புக்கான புகையிரத சேவை என்பதும் அதன்பின்னர் நீண்ட தூரங்களுக்கான புகையிரத பாதை உருவாக்கப்படவில்லை என்பதும் இலங்கையின் புகையிரத சேவை வரலாறு சொல்லும் உண்மையாகும்.

 

மட்டக்களப்பு – பொத்துவில் வரையிலான தூரம் ஏறக்குறைய 100 கிலோ மீற்றர்களாகும். மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஊடறுத்துச்செல்லும் இப்புகையிரதப்பாதை 02 மாநகரங்களை உள்ளடக்கியதாக அமையப்பெறுவதுடன் பல பிரதேசங்களையும் ஊடறுத்துச் செல்லும்.

 

காத்தான்குடி, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற நகரங்களைஊடறுத்துச்செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்கான கல்முனைக்கு விஜயம் செய்திருந்த மேன்மைதாங்கிய ஜனாதிபதி அவர்கள் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். அவரது உரையின் போது ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றியீட்டும் பட்சத்தில் இப்பிரதேச மக்களின் நீண்ட காலகோரிக்கையாக இருந்துவரும் மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத பாதை கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றித்தருவேன் என வாக்குறுதி வழங்கிச்சென்றார்.

 

 மேலும், ஜனாதிபதி அவர்கள் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியிருப்பதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் படிப்படியாக எடுத்துவருவதனைக் காணமுடிகிறது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இப்பிரதேச மக்களின் நீண்டகாலத்தேவையாக இருந்துவரும் குறித்த புகையிரதப்பாதையை அமைக்கும் கோரிக்கை ஜனாதிபதி அவர்கள் வாக்குறுதி வழங்கியபடி நிறைவேற்றிவைக்க வேண்டுமென கௌரவ ஜனாதிபதி அவர்களை இம்மாநகர சபை வேண்டுகின்றது. என்றார்.

c_Fotor

மாநகர முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட அனைத்து மாநகரசபை உறுப்பினர்களாலும் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையிலான புகையிரதப்பாதை அமைபதால் இப்பிரதேச மக்கள் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் இதன் அவசியம் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் சபை குறித்த பிரேரணையை ஏகமனதாக ஏற்று நிறைவேற்றியதுடன் இப்பிரேரணையை உடனடியாக உரிய தரப்பினருக்கு அனுப்புவதுடன் கல்முனை மாநகரசபையில் இருந்து குழு ஒன்றும் குறித்த தரப்பினரை சந்திக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

DSC_0008_Fotor