நமது நாகரிகத்தின் சிறப்புத்தன்மைகள் வீணாய் போக அனுமதிக்க முடியாது : ஜனாதிபதி !

pranab-mukherjee_650x400_81428795253

 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பற்றி பிரபல பத்திரிகையாளர் பிரபு சாவ்லா, புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில், இந்த புத்தகத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வழங்கினார்.

இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில் கூறியதாவது:-

நமது நாகரிகத்தின் பண்பாட்டு சிறப்புமிக்க அம்சங்கள் வீணாகப்போவதை நாம் அனுமதிக்க முடியாது. நமது நாகரிகத்தின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவை பல்லாண்டு காலமாக கொண்டாடப்பட்டவை.

இந்த முக்கியமான நாகரீக மதிப்பீடுகள், நம்மை பல நூற்றாண்டுளாக ஒருங்கிணைந்து இருக்கவைத்தன. பல்வேறு பழமையான நாகரிகங்கள் அழிந்து போய் விட்டன. ஆனாலும், ஆக்கிரமிப்புக்கு பின்னர் ஆக்கிரமிப்பு, நெடுங்கால அன்னிய ஆட்சி என்ற நிலையிலும் நமது நாகரிகம் இன்றைக்கும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டால், நமது ஜனநாயகத்தின் முன்னோக்கிய பயணத்தை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது. நமது நாடு பல்வேறு துறைகளில் அபாரமான முன்னேற்றம் கண்டுள்ளது. இன்னும் சாதிக்க வேண்டும். இதற்கு எல்லையே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி அருகேயுள்ள பிசோதா கிராமத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறப்பட்ட இக்லாக் என்பவருடைய குடும்பத்தினரை ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்கியதில் இக்லாக் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தருணத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நமது நாட்டின் நாகரிகம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்கிற வகையில் சுட்டிக்காட்டி பேசி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.