ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகிஷாசுரமர்தினி அவதாரத்தில் உள்ள துர்கா சிலை 1990-ம் ஆண்டுகளில் திருட்டுபோனது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை தேடிவந்தனர்.
இந்திய தொல்லியல் துறையினர் 2012-ம் ஆண்டு இந்த துர்கா சிலை ஜெர்மனி நாட்டில் ஸ்டட்கார்ட் என்ற இடத்தில் லின்டென் அருங்காட்சியகத்தில் இருப்பதாக அறிந்தனர். அதன்பின்னர் இந்திய அரசு அந்த சிலையை மீட்பதற்கான நடவடிக்கையை எடுத்தது. கடந்த ஆண்டு தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த சிலை தொடர்பான வழக்கு ஆவணங்களுடன் ஜெர்மனி சென்று அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசினார்கள்.
இந்நிலையில், 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் நேற்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்த பழமையான துர்கா சிலையை ஒப்படைத்தார். இதற்காக மெர்கெலுக்கும், ஜெர்மனி மக்களுக்கும் மோடி நன்றி தெரிவித்தார். இந்த சிலை ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தது என்றும், இது தீயசக்திகளை வெற்றி கொள்ளும் அடையாளம் என்றும் மோடி அவரிடம் விளக்கி கூறினார்.
இந்தியாவை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் இந்த சிலையை திருடி கடத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். 2011-ம் ஆண்டு சுபாஷ்கபூர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.