சிறையில் இந்திராணிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா ?

மராட்டிய மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி பிரபல தொழில் அதிபர் மனைவி இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா(வயது 25) எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் துப்பு துலங்கியது.

அப்போது பெற்றதாயே மகளை தனது கணவருடன் சேர்ந்து எரித்துக்கொன்றது அம்பலமானது. இதைத்தொடர்ந்து இந்திராணி முகர்ஜி, அவருடைய முன்னாள் கணவர் சஞ்சய் கன்னா, முன்னாள் டிரைவர் ஷியாம்வர் பிந்துராம் ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

de2872fd-706e-4350-bd49-72410e10802d_S_secvpf
மும்பையில் உள்ள ஆர்தூர் சாலை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை முயற்சி பற்றி போலீஸ் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் ஈடுப்பட்டிருக்கும் உயர் போலீஸ் அதிகாரி அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சிறையில் இந்திராணிக்கு விஷம் கொடுத்து அவரை யாராவது கொலை செய்ய முயற்சித்தார்களா என்ற நோக்கில் போலீஸ் விசாரணையில் ஈடுப்பட்டு வருவதாகவும், இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

வலிப்பு நோய் வராமல் தடுக்கும் சில மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுவது நம்பும் படியாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.