சேதனைப் பசளையின் மூலம் செய்கின்ற விவசாயத்தினால் ஆரோக்கியமாக வாழ முடியும் !

அபு அலா

உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமுனை விவசாய கல்லூரியில் இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“பாதுகாப்பான உணவு நிலையான விவசாயம்” என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அங்கு உரையாற்றுகையில்,

4_Fotor

நல்லாட்சியில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் சிறந்த ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இன்று வடக்கு மாகாண கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு வட்டக்கச்சியில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இதனை முன்னெடுக்கும் ஒரு நிகழ்வாக இதனை நாம் இங்கு ஆரம்பித்து வைத்துள்ளோம்.

 

இத்திட்டத்தின் மூலம் எமது பிரதேச விவசாயிகளையும், வீட்டுத்தோட்டம் செய்யும் குடும்பத்தவர்களையும் ஆர்வப்படுத்தி அவர்கள் சுயமாக உருவாக்கம் செய்யும் சேதனைப் பசளையின் மூலம் செய்கின்ற விவசாயத்தில் கிடைக்கின்ற காய்கறிகளை உண்ணுவதனால் எமது உடலையும், எமக்கு ஏற்படக்கூடிய நோய்களிலும் இருந்து நாம் பாதுகாப்புப் பெறலாம்.

5_Fotor

 

இன்று சந்தைக்கு வருகின்ற மரக்கறிவகைகள் ஏதோ ஒரு வகையில் இரசாயனம் கலக்கப்பட்ட பசளையின் மூலம் உறுவாக்கம் செய்து அதனால் கிடைக்கப்பெற்ற காய்கறிகளே அதிகம் சந்தைக்கு வருகின்றது. அதுமாத்திரமல்லாமல் காலத்துக்கு ஏற்றாப்போல் காய்கறிகளை பிஞ்சுப் பருவத்தில் அறுவடை செய்து அதற்கு இரசாணப் பதார்த்தங்களை பாவித்து மக்களின் பாவனைக்கு விடுகின்றனர். இதை அறிந்தும் நாம் அதை கொள்வனவு செய்து சமையல் செய்து உண்ணுகின்றோம்.

 

இதனை தடுக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்திற்கு நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட முன்னிற்கவேண்டும். அதுமாத்திரமல்லாமல் எமது பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம சேகவர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய குழுச் சங்கள் மற்றும் விவசாய கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் இணைந்து எமது பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கும் இவ்விடயம் தொடர்பில் மிகத் தெளிவான விளக்கத்தினை வழங்கி வந்தால் இத்திட்டத்தை இன்னும் இன்னும் முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கும்.

 

அதற்கான முயற்சிகளை வெளிக்கள உத்தியோகத்தர்கள் முன்னின்று உழைக்வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக உயரதிகாரிகள் அவர்களுக்கு தேவையான ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டும் என்றார்.

 

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர், உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், கணக்காளர் எம்.நஜிமுடீன், கால் நடை வைத்தியர் கேகுலதாஸ் தவமலர், உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் மற்றும் கிராம சேகவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய குழுத் தலைவர்கள், விவசாய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.