சப்றின்
ஐக்கிய தேசிய கட்சி வழங்கிய 02 தேசிய பட்டியல் எம்பிக்களையும் தமது கட்சியில் யார் யாருக்கு எப்படி எப்படி வழங்க வேண்டுமென்பது பற்றி இன்னுமொரு தீர்க்கமான முடிவுக்கு வந்துகொள்ள முடியாமல் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தடுமாறி, தத்தளித்துக் கொண்டிருக்கும் மூக்காத் தலைவர் றவூப் ஹக்கீம், 40 மாதங்கள் கடந்த இறுதி யுத்த இனப் படுகொலை தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கு த.தே.கூ. இணங்க வேண்டுமென்பது பற்றியும், 40 வருடங்கள் கடந்த தமிழ் பெருங்குடி மக்களின் சம அந்தஸ்து, சம உரிமை, சம சந்தர்ப்பங்களுக்கான போராட்டத்திற்கு தீர்வைப் பெற என்ன முடிவை எடுக்க வேண்டுமென்பது பற்றியும் மிகவும் காரமாக வழியைத் திணித்து, வீறாப்பாய் பேசியிருப்பது கூரையில் ஏறி கோழி பிடிக்க வழி தெரியாத குருக்கள், வானத்தைக் கீறி வைகுந்தம் போகுவதற்கு வழி சொன்ன கதை போல இருக்கிறது என்று முஸ்லிம் தேசியவாதிகள் இயக்க செயலாளர் நாயகம், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளையே முழுமையாக அறியாத மூக்காத் தலைவர், அவைகளுக்கான தீர்வுகள் பற்றி அரைகுறையாகவும் இதுவரையில் எதுவுமே அறிவிக்கவுமில்லை, எந்த நடவடிக்கையை எடுக்கவுமில்லை. அதுபோக, இந்த அரசாங்கத்தில் பூநகரி முதல் புத்தளம் வரையில் பறிகொடுக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறுவதற்குரிய எந்த நடவடிக்கையையுமே இதுவரையில் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் தொடர்பான இந்த முக்கிய செயற்பாடுகளை பற்றி எதுவும் அக்கறையில்லாமல் நடந்து கொண்டு தமிழர்களுடைய விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு வடக்கு கிழக்கில் தற்போது ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை மிகவும் காரசாரமான முறையில் திட்டித் தீர்த்திருப்பது சுயலாபம் பெறும் கெட்ட எண்ணத்தோடுதான் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
கண்டியில் ஐ.தே.காவில் போட்டியிட்டு மூக்காத் தலைவர் ஐ.தே.க. வாக்குளாலேயே வெற்றி பெற்றார் – முஸ்லிம் காங்கிரஸ் வாக்குளால் அல்ல. அம்பாறையில் ஐ.தே.கா.வோடு இணைந்து போட்டியிட்டதில் 4ம் இடத்திற்கு வந்த மூக்கா எம்பீ ஐ.தே.காவிற்கு கிடைத்த போனஸ் எம்பியாக தெரிவானார். ஐ.தே.க.விற்கு கிடைத்த மற்ற 3 எம்பீக்களிலும் மூக்காவுக்கு செலுத்தப்பட்ட வாக்குகளுக்கு ஒன்றரை எம்பீதான் கிடைத்திருக்கும்.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் மூக்கா தனித்துப் போட்டியிட்டிருந்தால் மூக்காவுக்கு ஒரேயொரு எம்பியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மிச்ச வாக்குகளில் 1 எம்பியும் கிடைத்திருக்க வேண்டும். மட்டக்களப்பில் மூக்கா தனித்து முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு 1 எம்பியைப் பெற்றது. திருகோணமலையில் ஐ.தே.க.வுடன் இணைந்து மூக்கா போட்டியிட்டும் ஒரு எம்பியையும் பெறமுடியவில்லை. கண்டியில் மூக்காத் தலைவர் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டிருந்தால் அவர் தோற்று அவருக்கு எதிராக ஆசாத் சாலி போட்டியிட்டிருக்கும் நிலையில் ஆசாத் வென்றிருப்பார். ஆகவே, இந்த முறை மூக்கா தனித்துப் போட்டியிட்டிருந்தால் 2 எம்பீகள் தான் கிடைத்திருக்கும். ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்டதனால் மேலதிகமாக 3 எம்பீக்கள் கிடைத்தன. இந்த 3 எம்பீக்களும் ஐ.தே.க.வுக்கு அரைவாசிக்கும் மேல் சொந்தமானவை. அது போதாதென்று மூக்காவுக்குரிய சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகளுக்கு ஐ.தே.க. 2 தேசியப் பட்டியல் எம்பீக்களையும், 1 முழு அமைச்சர் பதவியையும், 2 அரை அமைச்சார் பதவிகளையும் கொடுத்து மூக்காவை பெரியாளாக்கி வைத்ததற்குரிய எஜமான விசுவாசத்தை நன்றிக்கடனை மூக்காத் தலைவர் காட்டியது தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வள் என்று பாய்ந்த விவகாரமாகும். நான் இதற்கு முன்னர் இவ்வளவு காரமாய் பேசியது கிடையாது என்று தனது தோளில் தானே தட்டிக்கொண்டு தனது பேச்சை தானே புகழ்ந்து பாராட்டிக் கொண்டுள்ளதைப் பார்க்க, பாவம்! மிஸ்க்கீன்! என்ற பரிதாபப் பெரு மூச்சுதான் எழுந்தது.
பிரதம நீதியரசர் பதவி, மத்திய வங்கி ஆளுநர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பவற்றை மூக்கா தலைவர் தமது கட்சிக்கு கிடைத்த 2 தேசிய எம்பீக்களின் தரத்தில் வைத்துப் பார்த்தது தான் தமிழர்களுக்கு இனியாவது நம்பிக்கையீனத்தை கைவிட்டு நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று புத்தி கூறக் காரணமாய் இருந்திருக்க வேண்டும். பிரதம நீதியரசராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டதுவும், மத்திய வங்கி ஆளுநராக இன்னொரு தமிழர் நியமிக்கப்பட்டதுவும் முறைகேடான வழியில் செய்யப்பட்ட நியமனங்கள் என்றா மூக்காத் தலைவர் சொல்லுகிறார்? அவர்களை விட தகைமையிலும், நேர்மையிலும், பொருத்தத்திலும் கூடியவர்கள் இருந்த நிலையில் அவர்களை ஒதுக்கி வைத்து தமிழர்களை நியமிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த புதிய அரசாங்கம் ஒரு தமிழ் பிரதம நீதியரசரையும், ஒரு தமிழ் மத்திய வங்கி ஆளுநரையும் நியமித்தது என்றா மூக்கா தலைவர் சொல்லுகிறார்?
அப்படி தகுதி, தகைமையில்லாத நிலையிலும் தமிழர்கள் என்பதற்காக அவர்களை நியமித்தது யுத்தக் குற்ற விசாரணை, அதிகார பரவலாக்கம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் போன்ற விடயங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது உரிமைகளை, உண்மைகளை விட்டுக் கொடுத்து செயற்பட வேண்டுமென்பதற்காக என்றா மூக்காத் தலைவர் சொல்லுகிறார்? தீர்வினைப் பெற இணக்கப்பாட்டுப் பொறிமுறையினூடாகவே அதனை அடைய முடியுமென்று மூக்கா தலைவர் சொல்லுவது இதனைத்தானா?
ஜனாதிபதி நினைத்திருந்தால் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மாற்றியமைத்திருக்க முடியும். ஆனால், ஜனாதிபதி அவ்வாறு செய்ய முற்பட வில்லை. இதன் மூலம் அவர் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதிக்கு அநாவசியமாக வக்காலத்து வாங்கப்போய் ஜனாதிபதியை அவமானப்படுத்திருக்கிறார்.
தாத்தேக்கூத் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி பதவி நியாயப்படி பாராளுமன்ற நியமங்களுக்கேற்ப கிடைத்திருக்க வேண்டியதொன்றுதான். இதில் ஜனாதிபதி சட்டம், நியதிச் சட்டம் பாராளுமன்ற விழுமியங்களுக்கு மாறாக நடந்திருக்கின்றார் என்ற தோரணையில் மூக்காத் தலைவர் பேசியுள்ளார். பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளராக பணியாற்றிய மூக்காத் தலைவர், எதிர்கட்சி தலைவர் பதவி நியாயமற்ற முறையில் பாராளுமன்ற பாரம்பரியங்களைத் தூக்கி எறிந்து ஜனாதிபதியின் சொந்த விருப்பத்தில் தற்துணிவின் பேரில் கொடுக்கப்பட்டது என்றா சொல்லுகிறார்?
எதிர்க்கட்சித் தலைவர் பதவி த.தே.கூட்டமைப்புக்கு உரித்தான பதவி. அதைப் பற்றிப் பேசாது த.தே.கூ. வாய்மூடி மௌனியாக இருந்திருந்தால் தமது உரிமைகளுக்காக போராடுகிற ஒரு அமைப்பாக த.தே.கூ. இருந்திருக்க முடியாது. அதனால் தான், தமக்கு உரிமையானதை பெறுவதற்கான கோரிக்கையை த.தே.கூ. தலைவர் சம்பந்தன் விடுத்து தமது உரிமையை நிலைநாட்டி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றார். அந்தப் பதவி கிடைத்தது என்பதற்காக இதுகால வரை தமிழருக்குச் செய்யப்பட்டு வந்த அநியாயங்களுக்கு சரியான முறையில் தேர்வு தேடுவதில் தயவு தாட்சண்யம் காட்ட வேண்டுமென்று மூக்கா தலைவர் நினைப்பாரே ஆனால் தமிழர் போராட்டத்தைப் பற்றி அவர் அறிந்து கொள்ளவில்லை என்பதே அர்த்தமாய் இருக்கும்.
பழைய புண்களைச் சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்காகத் தான் தமிழ் பிரதம நீதியரசர், தமிழ் மத்திய வங்கி ஆளுநர், தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகள் கொடுக்கப்பட்டன என்றா மூக்கா தலைவர் சொல்லுகிறார்?
முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச விசாரணையை மையமாக வைத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தென்பகுதியில் நாட்டுப்புற அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களை சூடேற்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு செயற்பட்டு வருகின்ற கழுகுக் கூட்டங்களுக்கு தீனி போடும் வகையில் வடுக்களை தடவித் தடவி பழைய புண்களைச் சொறிந்து சொறிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாம். இதற்கு முன்னர் நான் இவ்வளவு காரமாக பேசிய கிடையாது|| என்று மூக்காத் தலைவர் றவூப் ஹக்கீம் கூறியுள்ளார். எஜமான விசுவாசமென்றால் இலேசு பட்ட விடயமா என்ன? நானாவுக்கும் தேசிய பட்டியல் அல்லவா!
மூக்காத் தலைவரின் யோசனைப்படி த.தே.கூட்டமைப்பு என்ன முடிவு எடுப்பதாகவிருந்தாலும் அந்த முடிவு முன்னைய ஆட்சியாளர்களை பதவிக்குக் கொண்டுவரும் முடிவாக இருக்கக் கூடாது. அப்படி வந்தால் மூக்கா தலைவரின் நிலைமை இரண்டும் கெட்டான் நிலைமையாக போய்விடும். ஐ.தே.க.விடம் 4 தேசிய பட்டியல் எம்பீக்களைப் பெற்று மகிந்தவின் ஆட்சிக்கு மாறிய றெக்கோட்டை மீண்டும் போட வேண்டி வரும். அவரைப் பொறுத்தவரை ஐ.தே.க. வுக்கோ ஜனாதிபதிக்கோ என்ன நடந்தாலும் பரவாயில்லை. தனது பட்டம் பதவிக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதுதான் முஸ்லிம் காங்கிரஸின் முழு முதற் கொள்கையாகும். ஜனவரி 08 ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்று முடிந்த பிறகும் மூக்காத் தலைவர் மகிந்தவோடு அவருக்கு ஆதரவாகவே இருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூத்தீன் பொது அதிரணி வேட்பாளரான மைத்திரியின் பக்கத்திற்கு அதிரடியாகப் பாய்ந்தார். அதனால், நிலைகுலைந்து பேசிய பேரமும் பிழைத்துப் போனதால் மைத்திரியின் பக்கம் மாறியவர் தானே நமது மதிப்பிற்குரிய மூக்காத் தலைவர்.
புனர்வாழ்வு அமைச்சராக தமிழர் ஒருவரை நியமித்துள்ளோம் என்று மூக்காத் தலைவர் சொல்லுகிறார். புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதனை மூக்காத் தலைவரா நியமித்தார்? அமைச்சர் சுவாமிநாதன் ஐ.தே.கட்சியின் நீண்டகால உறுப்பினர். மூக்காத் தலைவரைப் போல் ஐ.தே.க.வுக்கு வந்தான் வரத்தான் இல்லை. பாருங்கள்! காலம் எப்படி மாறிக் கிடக்கிறது. மூக்காத் தலைவர் ஸார்! உயர உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாவதில்லை ஸார்! குல்லு ஷைன் யர்ஜிஊ இலா அஸ்லி அசலில் உள்ளதே மீளும்.
ஏமாற்றி சூடேற்றக்கூடிய தென்பகுதி நாட்டுப்புற அப்பாவிச் சிங்கள மக்களைப் போல உள்ள வடகிழக்கு நாட்டுப் புற அப்பாவி முஸ்லிம் மக்களின் தலைவர் தானே ஒழிய தமிழ், முஸ்லிம் ஒற்றுமையைப் பெரிது படுத்தி உரிமைகளுக்காகப் போராடும் முஸ்லிம் புத்திப் போராளிகளின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அல்ல என்பதனால் அவரது பாரதூரம் தெரியாத பச்சைப் பிள்ளைத்தனமான பேச்சை பெரிது படுத்த வேண்டாம் என்று உரிமைகளுக்காகப் போராடும் சகல சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரின் சார்பாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் நாம் மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறோம்.
நியாயமான எந்தப் போராட்டத்திற்கும் கௌரவமான தீர்வு கிடைக்க வாழ்த்துகிறோம்!