தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் தென்ஆப்ரிக்க அணி வீழ்த்தியது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 72 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட வெளிநாட்டு பயணமாக கருதப்படும் இந்த தொடரில் மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி ஆகியவை இடம் பெறுகிறது.
இந்தியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளெசிஸ் முதலில் பந்து வீசவுள்ளதாக தெரிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 66 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டி வில்லியர்கஸ்- அம்லா ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 77 ரன்களை சேர்த்து இருந்த போது அம்லா(36) ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டி வில்லியர்ஸ்(51) அஷ்வின் பந்தை சிக்சருக்கு அடிக்க முற்பட்டு போல்டு ஆகி வெளியேறினார்.
3 வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டு பிளசிஸ் 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து 4 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டுமினி, பெஹ்ராடின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக டுமினி பொறுப்புடனும் அதேநேரத்தில் ஆக்ரோஷத்துடனும் விளையாடினார். அக்ஷர் படேல் வீசிய 16 வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து டுமினி ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அறிமுக வீரர் அரவிந்த் வீசினார். பரபரப்பின் உச்ச கட்டத்துக்கே ஆட்டம் சென்றதால் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே சென்றனர். முதல் பந்தை எதிர்கொண்ட பெஹ்ராடீன் ஒரு ரன்னை எடுத்தார். 2 வது பந்தை எதிர்கொண்ட டுமினி, 2 ரன்கள் சேர்த்தார். 3 வது பந்தை அரவிந்த புல்டாஸாக வீச இமாலய சிக்சர் ஒன்றை விளாசினார். இதனால், ஆட்டம் டை ஆனது. 4 வது பந்தில் ஒரு ரன்னை சேர்த்த டுமினி (34 பந்துகளில் 68 ரன்கள்) தனது அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றார். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தென் ஆப்ரிக்கா அணி வீழ்த்தியது.