போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு சாதகமாக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் நேற்று முன்தினம் ஒருமனதாக நிறைவேறியது.
இதுகுறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு கூட்டத்தில் 1.10.2015 அன்று இலங்கையில் இணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமை ஆகியவை குறித்த ஒரு தீர்மானம் வாக்கெடுப்பு எதுவும் இன்றி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 16.9.2015 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது.
ஒட்டுமொத்த தமிழினத்தின் லட்சியத்திற்கும், இலங்கை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற போது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தை இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டுவர வேண்டும் என்றும், இலங்கைக்கு ஆதரவான நிலையை அமெரிக்கா எடுத்தால், அதனை மாற்ற ராஜ தந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக 16.9.2015 அன்று நிறைவேற்றப்பட்டது.
16.9.2015 முதல் 2.10.2015 வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவின் 30-வது கூட்டத்தில் இலங்கையில் இணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புடைமை பற்றிய மனித உரிமை குழுவின் ஆணையரது அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, வரைவு தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது இலங்கையே போர்க்குற்றங்கள் பற்றி விசாரித்துக்கொள்ளலாம் என்ற வகையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் உள்ளது என்பதையும், அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்திய பேரரசுக்கு உள்ளது என்பதையும் நான் தெளிவாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன்.
அப்போது 1.9.2015 அன்று இலங்கை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் சுட்டிக்காட்டினேன். அந்த தீர்மானத்தில் சர்வதேச குற்றங்கள் புரிந்தவர்கள் மீது இலங்கையிலேயே விசாரணை மேற்கொள்வது என்பது நீதியை பரிகசிப்பது போன்ற செயல் என்றும், இலங்கை மக்களைக் காத்து, அவர்களுக்கு சேவை புரிய வேண்டிய இலங்கை நாட்டின் முக்கியத்தூண்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி நியாயம் வழங்க தவறிவிட்டன என்றும் தெரிவித்து, இலங்கை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமுதாயத்தை இலங்கை வடக்கு மாகாண சபை கேட்டுக்கொண்டுள்ளதை பற்றி எடுத்துக்கூறினேன்.
அந்த தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் தான் நீதியும், நியாயமும் நிலை நிறுத்தப்படும் என்பதால் தான் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் எனில் சர்வதேச விசாரணை தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டு பிரதமருக்கு நான் 16.9.2015 அன்றே ஒரு கடிதம் எழுதினேன். அதனுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தின் நகலையும் அனுப்பியிருந்தேன். எனினும், மத்திய அரசு இது தொடர்பாக எவ்வித நேர்மறை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது ஆறா மனப்புண்ணை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்டு, 1.10.2015 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானம் இலங்கை தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக அமையாது. இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ள தீர்மானம் தான்.
மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானம் பற்றிய சர்வதேச சட்டங்கள் மீறல் குறித்த நம்பகத்தன்மை உடைய நீதி முறைமை, சுதந்திரமான நீதி மற்றும் வழக்கு தொடுப்பு நிறுவனங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்றும், இலங்கையின் நீதி முறைமையில் காமன்வெல்த் மற்றும் இதர வெளிநாட்டு நீதிபதிகள், எதிர்வாதிகளின் வழக்குரைஞர்கள், அங்கீகரிக்கப்பட்ட வழக்கு தொடுப்போர் மற்றும் விசாரணை செய்வோர் ஆகியோரின் பங்கேற்பு முக்கியமானது என்பதையும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. எனினும், இது எந்த வகையிலும் சர்வதேச நீதி விசாரணைக்கு ஈடானது இல்லை.
இலங்கை அரசிடம் மன மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதி நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வலுவற்ற தீர்மானம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எவ்வித நன்மையையும் பயக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.