எம்.ஐ.எம்.றியாஸ்
அக்கரைப்பற்று பிராந்திய அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் தலைமையில் இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் நல்லாட்சியின் கீழ் முதல் தடவையாக நடைபெற்றது.
இதன் போது அக்கரைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில் வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பு கல்வி சுகாதாரம் கலாசாரம் போக்குவரத்து வடிகாலமைப்பு விவசாய அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்களின் அபிவிருத்திகள் மற்றும் செய்து முடிக்கப்பட்ட செய்யப்படுகின்ற மற்றும் செய்ய வேண்டிய வேலைப்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு முன்வைத்தனர்.
உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் அவர்களினால் 2015 ஆம் ஆண்டு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் 28 மில்லியன் ரூபாச் செலவில் கிராமப்பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் 2014 ஆம் ஆண்டு பிரதேசசெயலத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடங்களை அடங்கிய முன்னேற்ற மீளாய்வு அறிக்கையினை சமர்ப்பித்தார்.
2015 ஆம் மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இப்பிராந்தியத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை துறைசார்ந்த அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தலைவருமான ஏ.எல்.தவத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் செயலாளருமான ஏ.எம்.அப்துல்லத்தீப் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசீம் உதவிப்பிரதேச செயலாளர் எம்.எம்.எம்.றஸாம் கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எம்.தமீம் ஏ.எல்.ஹுசைனுடின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர் என துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.