அண்மைய காலங்களில் சிறுவர்கள் முகங்கொடுத்த துயரமான சம்பவங்கள் தொடர்பில் தான் மிகுந்த மனவேதனையடைவதாக தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண நிலமைகள் காரணமாக பெற்றோர்கள் உருக்குலைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விஷேட தொலைபேசி சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், இதன்மூலம் அவசர சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினரை தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு இந்த சாதனம் மூலம் குழந்தைகள் எங்கு இருக்கின்றார்கள் என்பதனை சரியாக அறிந்து கொள்ள முடியும் என்றார்.
வளர்ச்சியடையும் தொழில்நுட்பத்துடன் இணைந்து உலகில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் அதன்படி இந்த சாதனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.