முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாண அதிகார எல்லைக்குள் இருக்கும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நேற்று காலை 10 மணிக்கு கிழக்கு மாகாண சபை கூட்ட மண்டபத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி மன்றங்கள் அதன் பணிகளைச் சரியாகக் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு சபைகளும் தங்கள் பிரதேசத்தை மையப்படுத்தி செய்யவேண்டிய பொறுப்புக்கள் பற்றி முதலமைச்சர் தனது கருத்தினை செயலாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். முதலமைச்சர் அங்கு தொடந்து கருத்துத் தெரிவிக்கையில்:
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தங்களுக்குரிய கடமைகளைச் சரியாக செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு சபைக்குக் கீழ் உள்ள அதிகாரங்களை சரிவரப் பயன்படுத்துவதன் மூலம் அந்தந்த சபைக்குரிய தேவைகளைச் சரிவரப் பூர்த்தி செய்ய முடியும். சபைகள் பெயரளவில் இருப்பதில் எந்தப்பிரயோசனமும் இல்லை. பிரதேசங்களில் பல பிரச்சனைகள், தேவைகள் இருந்து கொண்டே இருக்கிறது. அவைகளை கண்டு அதற்கான தீர்வுகளை சரியாக வழங்குபவர்களாக செயலாளர்கள் திகழவேண்டும். உதாரணமாக வரி அறவீடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சபைகளுக்கான வருமானத்தைக் கூட்டிக்கொள்ளலாம். அதன் மூலம் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே அதற்கான முக்கியத்துவம் வழங்குவதில் சரியான தீர்மானம் எடுத்து செயல்படுவது செயலாளர்களின் கடமையாகும். அடுத்த ஆறுமாத காலத்திற்குள் அனைத்து சபைகளும் மறுசீரமைப்புச் செய்யப்படவேண்டும்.
அத்துடன் கிழக்கில் அனைத்து சபைகள் மூலமும் குறிப்பிட்ட ஊர்களில் வசிக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க தொழிற்பேட்டைகளை உருவாக்க முடியும். அதற்கான சகல வேலைப்பாடுகளையும் செய்ய ஒவ்வொரு சபை செயலாளர்களுடன் உத்தியோகத்தர்களும் முன்வரவேண்டும். அப்போதுதான் கிழக்கை கட்டியெழுப்ப முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அத்துடன் கிழக்கில் முதலிடுங்கள் எனும் மாபெரும் மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் பதினைந்தாம் திகதி 15.12.2015 கொழும்பில் இடம்பெறவிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தங்களின் திறமைகளைக் காட்டவேண்டும் அதற்காக இன்றிலிருந்தே ஒவ்வொரு சபைகளும் தங்கள் சபைகளின் வேலைகளைச் செய்ய ஆயத்தமாகுமாறும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.